சென்னையில் 1,000 ஏக்கரில் 'அறிவகம்' AI City? முதல்வர் விஜய்யின் மெகா திட்டம்... தவெக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையிலும் 'அறிவகம்' (Arivagam) என்ற பெயரில் தன்னிறைவு பெற்ற ஏ.ஐ நகரம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தை செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு புதிய AI மிஷன் மற்றும் 'அறிவகம்' (Arivagam) என்ற பெயரில் தன்னிறைவு பெற்ற AI City அமைக்கும் திட்டத்தை விரைவில் அறிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திட்டம் அரசின் பட்ஜெட் ஆலோசனைகளில் இடம்பெற்றுள்ளதாகவும், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தகவல்களின்படி, முதல் கட்டமாக சென்னை அருகே சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திலான AI நகரம் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கான அலுவலகங்கள், AI மாதிரி உருவாக்க மையங்கள், ஆராய்ச்சி மையங்கள், உலகளாவிய திறன் மையங்கள் (GCC), நவீன குடியிருப்புகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை
இந்த மெகா திட்டத்தை டிட்கோ மற்றும் தொழில்துறைத் துறை இணைந்து செயல்படுத்தலாம் என்றும், இது முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட AI Park திட்டத்திலிருந்து தனித்திட்டமாக அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட AI தொடர்பான திட்டங்களும் மறுஆய்வு செய்யப்பட்டு, பயனுள்ள திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் டெவலப்பர்களுக்கு குறைந்த செலவில் உயர்தர GPU மற்றும் AI Compute வசதிகளை வழங்கும் மானியத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் புதிய AI தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் இளம் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மாநில AI துறை அமைச்சர் ஆர். குமார் முன்பு தெரிவித்தபடி, முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு இந்த AI நகரம் 3,000 ஏக்கருக்கும் அதிகமாக விரிவடைய வாய்ப்புள்ளது. பல்கலைக்கழகங்கள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், உலகளாவிய திறன் மையங்கள், சர்வதேச தரத்திலான குடியிருப்புகள் உள்ளிட்ட முழுமையான நகரமாக இது உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தின் 16 மாவட்டங்களில் AI திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்து வேலைவாய்ப்பு பயிற்சிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 'அறிவகம்' AI City திட்டம், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய முயற்சியாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காவிரி பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்... உடன் செல்லும் 13 பேர் யார்? வெளியான முழு விவரம்!