×
 

வாடிவாசல் ரெடி! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகள்.. 2,200 போலீசார் குவிப்பு!

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளைக் கோலாகலமாகத் தொடங்கவுள்ள நிலையில், பாதுகாப்பிற்காக 2,200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை (ஜனவரி 15) கோலாகலமாகத் தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் மதுரையில் இன்று இரவு 10 மணி முதல் அதிரடிப் போக்குவரத்து மாற்றங்களை மாநகரக் காவல்துறை அமல்படுத்தியுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் முதல் அதிரடி ஆட்டம் அவனியாபுரத்தில் நாளை அரங்கேறுகிறது. இதற்காக அவனியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், உலகெங்கிலும் இருந்து வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மைதானம், வாடிவாசல் மற்றும் காளைகள் வெளியேறும் பகுதிகள் என அனைத்தும் காவல்துறையின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் பாதுகாப்புப் பணிகள் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். “பாதுகாப்புப் பணிக்காக எஸ்பி (SP) அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில் 2,200 போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்; ஜல்லிக்கட்டு அரங்கம் மற்றும் காளைகள் வரும் பாதைகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்தார். மேலும், தள்ளுமுள்ளைத் தவிர்க்க முதற்கட்டமாகத் டோக்கன் பெற்ற முதல் 500 காளைகள் மட்டுமே முதலில் அனுமதிக்கப்படும் என்றும், மது அருந்திய நிலையில் காளைகளைக் கொண்டு வருபவர்களுக்குத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். போலீசாரும் பாதுகாப்பு கவசங்களை அணிந்தே பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீறிப்பாயும் காளைகள்..!! கோலாகலமாக தொடங்கியது தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு..!!

போக்குவரத்து மாற்றங்களைப் பொறுத்தவரை, இன்று இரவு 10 மணி முதல் அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பிலிருந்து நகருக்குள் வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அம்பேத்கர் சிலை சந்திப்பிலிருந்து திருப்பரங்குன்றம் செல்ல அனுமதி இல்லை; அதற்குப் பதிலாக வாகனங்கள் அவனியாபுரம் பைபாஸ் மற்றும் வெள்ளக்கல் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு முடிந்து வெளியேறும் காளைகள், அவனியாபுரம் பைபாஸ் - செம்பூரணி சாலை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும் எனத் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் ஜல்லிக்கட்டு முடியும் வரை அமலில் இருக்கும் என்பதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


 

இதையும் படிங்க: விஜய்க்கு மீண்டும் டெல்லி சம்மன்! பொங்கல் முடிந்த கையோடு ஆஜராக சிபிஐ அதிரடி உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share