×
 
☰

ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து நிலையங்கள், வழித்தடங்கள் மற்றும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் எவ்விதச் சிரமமுமின்றி சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதற்கு வசதியாக, போக்குவரத்துத் துறையின் சார்பில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து 6,199 சிறப்புப் பேருந்துகள் உள்பட ஒட்டுமொத்தமாக 14,963 பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது; மேலும், பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்திலிருந்து மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் கட்டணமில்லா இலவச இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை (செய்தி வெளியீடு எண் 864) வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், ஆயுத பூஜை பண்டிகையையொட்டி அக்டோபர் 15 முதல் 18 வரை நான்கு நாட்களுக்குச் சென்னையிலிருந்து வழக்கமான 8,764 பேருந்துகளுடன், கூடுதலாக 6,199 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 14,963 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதில் தொடக்க நாளான அக்டோபர் 15 அன்று மட்டுமே 2,546 பேருந்துகளில் 1,01,840 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்; 9,636 பயணிகள் இணையவழியில் முன்பதிவு செய்து தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நந்தனம் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சென்னையில் பேருந்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு 5 முக்கிய இடங்களிலிருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படுகின்றன:

இதையும் படிங்க: 2,500 தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம்: 3 வாரங்களில் அரசாணை என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் மார்க்கமாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கிருந்து புறப்படுகின்றன.

கிளாம்பாக்கம் CMDA காலநிலை பூங்கா அருகில் (தற்காலிக முனையம்) வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையம்: கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் சோதனை அடிப்படையில் இங்கிருந்து புறப்படுகின்றன.

கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (CMBT) கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாதவரம் புதிய பேருந்து நிலையம் (MMBT) ஆந்திர மாநில மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக வடசென்னையிலிருந்து இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகள் புறப்படுகின்றன.

பேருந்து இயக்கத்தைச் சீரமைக்கவும் பயணிகளுக்கு வழிகாட்டவும் கிளாம்பாக்கத்தில் 7 பொது மேலாளர்கள் தலைமையில் 35 அலுவலர்களும், மறைமலைநகரில் 2 பொது மேலாளர்கள் தலைமையில் 10 அலுவலர்களும், கோயம்பேட்டில் 3 பொது மேலாளர்கள் தலைமையில் 15 அலுவலர்களும், மாதவரத்தில் ஒரு பொது மேலாளர் தலைமையில் 6 அலுவலர்களும் முழுநேரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளாம்பாக்கத்திலிருந்து மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் தடையின்றி இலவச இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன; கோயம்பேடு மற்றும் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கிளாம்பாக்கத்திற்கு கூடுதல் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் தங்களது குறைகளைத் தெரிவிக்கக் கிளாம்பாக்கத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது (தொலைபேசி எண்: 94450 14436 / கட்டணமில்லா எண்: 149). மேலும், தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கக் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800-425-6151 மற்றும் வாட்ஸ்அப் எண் 93848 08333 ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. தற்காலிக நிலையங்களில் குடிநீர், கழிவறை, மின்விளக்கு வசதிகளுடன் 'உங்களுக்கு உதவலாமா?' தகவல் மையங்களும், மின்னணு தகவல் பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பண்டிகை முடிந்து ஊர் திரும்பும் மக்களின் வசதிக்காக, வரும் அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வழக்கமான 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 4,809 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 9,191 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மதம் மாறியவர்களின் இடஒதுக்கீட்டை பறிப்பதா? சட்டத்திருத்தம் கோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share