×
 
☰

குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

ஆனால் வர்த்தக வட்டாரங்கள் சில முக்கிய காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. 

வங்கதேச அரசு இந்தியாவிலிருந்து குஜராத் ஹில்சா மீன் இறக்குமதியை திடீரென நிறுத்தியுள்ளது. ஏற்கனவே இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 103 தடையில்லா சான்றிதழ்களை மீன்வளத்துறை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே அதிக ஹில்சா உற்பத்தி செய்யும் நாடாக வங்கதேசம் இருந்தபோதிலும், இந்தத் தலைகீழ் வர்த்தகத் தடை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக துர்கா பூஜை காலத்தில் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு ஹில்சா மீன்கள் அனுப்பப்படும். ஆனால் இந்த ஆண்டு வங்கதேசத்தில் உள்நாட்டு உற்பத்தி குறைந்ததால் விலை கிலோவுக்கு 2,600 ரூபாய்க்கும் மேல் உயர்ந்தது. இதனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலிருந்து குஜராத்தின் பரூச் மற்றும் நர்மதா நதிப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட ஹில்சா மீன்கள் பெட்ராபோல் மற்றும் பெனபோல் எல்லை வழியாக வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டன. 

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 500 டன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 23 அன்று மீன்வளத்துறையின் தற்காலிக இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமது கலேத் கனக் வெளியிட்ட சுற்றறிக்கையில் 103 இறக்குமதி உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. அதிகாரப்பூர்வமாக எந்தக் காரணமும் கூறப்படவில்லை. ஆனால் வர்த்தக வட்டாரங்கள் சில முக்கிய காரணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. 

இதையும் படிங்க: குஜராத் ஏக்தா நகரில் 72-வது தேசிய திரைப்பட விருது விழா: செப். 22-ல் டெல்லியைத் தாண்டி புதிய சாதனை!

குஜராத் ஹில்சா மீன்கள் பத்மா நதி ஹில்சாவை விடச் சுவையிலும் தரத்திலும் மாறுபட்டவை. இவற்றைச் சில வியாபாரிகள் “உள்ளூர் பத்மா மீன்” என்று கூறி அதிக விலைக்கு விற்பனை செய்ததாகப் புகார்கள் எழுந்தன. மேலும், இறக்குமதியின் போது உண்மையான மதிப்பை விடக் குறைவாகக் காட்டி ஹவாலா பரிமாற்றங்கள் நடப்பதைத் தடுக்கவும், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தத் திடீர் தடையால் எல்லையில் மீன்களுடன் காத்திருந்த இறக்குமதியாளர்கள் கடும் நிதி இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்தியாவில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மீன்களை மீண்டும் குறைந்த விலையில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வரவிருக்கும் துர்கா பூஜையின் போது வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய பத்மா நதி ஹில்சா மீன்களின் வரத்தும் பாதிக்கப்படலாம் என மேற்கு வங்க மீன் இறக்குமதியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கிடையேயான மீன் வர்த்தக உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: குஜராத்தில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்: நாளை துவங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share