B.ed மாணவர் சேர்க்கை விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு! உயர்கல்வித்துறை அறிவிப்பு...
பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.எட். என்பது கல்வியியல் இளங்கலைப் பட்டப்படிப்பு. இது ஆசிரியர் பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்முறை படிப்பாகும். இந்தப் படிப்பு மாணவர்களை ஆசிரியர் பணிக்கு தயார்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது, குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய விரும்புவோருக்கு இது அவசியமானது. ஆசிரியர் தொழிலுக்குத் தேவையான கற்பித்தல் திறன்கள், கல்வி முறைகள், மாணவர் மனோபாவம், மற்றும் கல்வி மேலாண்மை ஆகியவற்றைப் பயிற்றுவிக்கிறது. இது மாணவர்களுக்கு பாடங்களை எவ்வாறு திறம்பட கற்பிக்க வேண்டும், வகுப்பறை மேலாண்மை, மாணவர் மதிப்பீடு, மற்றும் கல்வி உளவியல் ஆகியவற்றைப் பற்றி கற்றுக்கொடுக்கிறது. ஆசிரியர் பணிக்குத் தேவையான திறன்களை வளர்ப்பது மற்றும் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 21 அரசு உதவிப் பெறும் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கான 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள், ஜூலை 9-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 18-ந்தேதி வெளியாகும் என்றும் கலந்தாய்வு ஜூலை 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு கிரீன் சிக்னல்.. 5 கிராம மக்கள் சம்மதம்.. தமிழக அரசு தீவிரம்..!
மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு ஆணை ஜூலை 28-ந்தேதி நடைபெறும். ஆகஸ்ட் 6-ந்தேதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பி.எட் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்தது. இந்த ஆண்டுக்கான பி எட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பி.எட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் வரும் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் தடை பின்பற்றப்படுகிறதா..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை போட்ட உத்தரவு என்ன..?