×
 

"பகவத் கீதை மதப் புத்தகம் அல்ல; அது ஒரு தார்மீக அறிவியல்!" – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி தீர்ப்பு!

பகவத் கீதை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாத பாரதிய நாகரிகத்தின் ஒரு பகுதி என்றும், அது ஒரு தார்மீக அறிவியல் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவை ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளையின் சார்பில் அதன் அறங்காவலர் சுவாமி சர்வானந்த சரஸ்வதி விமல் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) கீழ் தங்களது அமைப்பைப் பதிவு செய்யக் கோரி 2025-ல் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பில், மூன்று ஆண்டுகளாக விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டு, இறுதியில் உரிய விளக்கங்களுக்குப் பிறகும் தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.

மத்திய அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில், மனுதாரர் அமைப்பு வெளிநாட்டு நிதி விதிகளில் சிலவற்றை மீறியுள்ளதாகவும், இதில் தேசியப் பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் இருப்பதாகவும் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக, மனுதாரர் அமைப்பு ஒரு மத அமைப்பாகச் செயல்படுவதாலேயே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பகவத் கீதையைப் போதிப்பதையே ஒரு மதச் செயல்பாடாக அதிகாரிகள் கருதியதை அறிந்த நீதிபதி, அதற்குத் தனது தீர்ப்பின் மூலம் ‘சுளீர்’ விளக்கம் அளித்துள்ளார்.

பகவத் கீதையை ஒரு மதப் புத்தகமாகப் பார்க்காமல், அதை ஒரு ‘தார்மீக அறிவியல்’ என்று அழைப்பதே பொருத்தமானது என நீதிபதி குறிப்பிட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கனவே கீதையை ‘தேசிய தர்ம சாஸ்திரமாக’ அங்கீகரிக்கலாம் என்று கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மகாத்மா காந்தி, திலகர், அரவிந்தர் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசத்தை எழுச்சியடையச் செய்யக் கீதையையே பயன்படுத்தினர் என்றார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51-A(f)-ன் படி, நமது கூட்டு கலாச்சாரத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க: UNESCO-வின் சர்வதேச பதிவேட்டில் 'பகவத் கீதை'..!! மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்..!!

யோகாசனம் குறித்தும் குறிப்பிட்ட நீதிபதி, அதை மதப் பிரஸம் மூலம் பார்ப்பது கொடுமையானது என்றும், அது உடல் நலனுக்கான ஒரு உலகளாவிய மதச்சார்பற்ற அனுபவம் என்றும் கலிபோர்னியா நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டினார். மனுதாரர் அமைப்பு ஏற்கனவே வருமான வரிச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மத்திய அரசின் நிராகரிப்பு உத்தரவை அதிரடியாக ரத்து செய்தார். மேலும், மனுதாரரின் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, விதிகளுக்கு உட்பட்டு மூன்று மாதங்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என எஃப்சிஆர்ஏ இயக்குநருக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி கொடுத்த அன்பு பரிசு..!! நெகிழ்ச்சி தருணம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share