பிக்பாஸ்... உடனே நிறுத்துங்க... கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கிய வேல்முருகன்...!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கினார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழர் பண்பாடு என்பது, நெஞ்சில் நாணம், வாழ்வில் ஒழுக்கம், நாவிலே நெறி என்று, பன்னெடுங்காலமாக வடிவெடுத்த ஒரு நாகரிகச் செல்வம்., அந்த மகத்தான செல்வத்தை, இன்று பொழுதுபோக்கு என்றப் பெயரில் அழிக்க முயலும் ஒரு வணிகப் பாம்பு தான், பிக் பாஸ் நிகழ்ச்சி என்று கூறினார்.
தமிழர் மரபையும் மதிப்பையும் கேலி செய்து, சீரழிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது என்றும் இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய சமூகச் சீரழிவு., தமிழர் பண்பாட்டையும், குடும்ப அமைப்பையும் குலைக்கும் நச்சு நிகழ்ச்சி என்று தெரிவித்து இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் தினசரி அத்தியாயங்கள் சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கின்றன என்றும் இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு வெறுப்பையும், வன்முறையையும், தனிமனித மோதல்களையும் மட்டுமே வாழும் முறையாகக் கற்றுக்கொடுக்கிறது எனவும் தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள், விதிமீறல்கள், மற்றும் சமூக எதிர்ப்புகளை எழுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: ஆம்னி பஸ்களில் பகல் கொள்ளை... அரசு கண்டுக்காதா? வேல்முருகன் கொந்தளிப்பு...!
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கோரி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார். சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை வேல்முருகன் வழங்கினார்.
இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய கட்டளை... கூட்டணி குறித்து டெல்லிக்கு டேரக்ட்டா போன் போட்ட விஜய்...!