×
 

விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு மீது IUML மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபூபக்கர் பொள்ளாச்சியில் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் போதிய விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் ஏதுமின்றி ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணான வகையில் மத்திய பாஜக அரசு அவசர அவசரமாக மசோதாக்களை நிறைவேற்றி வருவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மிகக் காட்டமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் மிக எழுச்சியாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 55 மாவட்டங்களிலும் உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன; மாணவர் பேரவையின் சார்பில் சென்னை, காயல்பட்டினம், ஏற்காடு, வாணியம்பாடி மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மண்டலங்களில் பிரம்மாண்ட பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 

இதையும் படிங்க: MMDR சட்ட திருத்த மசோதா..! மாநிலங்களின் சுயாட்சி நிதி பறிபோகும் அபாயம்..! கனிமொழி MP எச்சரிக்கை.!!

அதேவேளையில், நாடாளுமன்ற ஜனநாயக மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் மக்கள் மன்றத்தில் விவாதங்கள் இன்றி மசோதாக்களை நிறைவேற்றும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். எதிர்காலத்தில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் போது, தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை எந்தக் காரணத்தைக் கொண்டும் குறைக்கப்படக் கூடாது; 7.1 சதவீதப் பங்கீட்டின் அடிப்படையில் தமிழகத்திற்கான தொகுதிகள் முழுமையாகத் தக்கவைக்கப்பட வேண்டும் எனத் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

மேலும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு இதுவரை இல்லாத அளவாக ₹201 கோடி நிதி ஒதுக்கீடு செய்தமை, சென்னையில் வக்ஃபு வாரியக் கல்லூரி அமைப்பது, பள்ளிவாசல் மற்றும் மதரஸாக்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹2,000 கல்வி உதவித்தொகை மற்றும் ஹஜ் மானியத்தை ₹35,000 ஆக உயர்த்தியது உள்ளிட்ட அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் வெளியிட்ட 11 புதிய அறிவிப்புகளுக்கும், காயிதே மில்லத் பெயரில் விருது மற்றும் இஸ்லாமியத் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆகிய திட்டங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பிசிஎம் இடஒதுக்கீடு தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: அமித் ஷா போட்ட திடீர் ‘டெட்லைன்’! எதிர்க்கட்சிகளுக்கு செக்... பார்லி.,யில் உச்சகட்ட பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share