×
 

“சென்னையில் பறவை காய்ச்சல்!” பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

சென்னை அடையாறில் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளைப் பரிசோதித்ததில், அவற்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது போபால் ஆய்வக முடிவுகளில் உறுதியான நிலையில், சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னையில் காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டப் பரிசோதனையில் ‘பறவைக் காய்ச்சல்’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுத் தமிழக அரசு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் பறவைக் காய்ச்சல் பரவல் மற்றும் அரசு விடுத்துள்ள வழிகாட்டுதல்கள் கூறியுள்ளதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அடையாறு பகுதியில் ஏராளமான காகங்கள் திடீரெனச் சாலையோரம் இறந்து கிடந்தன. கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அந்தச் மாதிரிகளை மீட்டுப் போபாலில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வில், காகங்களுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கன்னிமாரா நூலகத்தில் கார்ல் மார்க்ஸ்! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!

இந்தத் தொற்று பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது மிக அரிதானது என்றாலும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இருமல், சளி, காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், அதனைச் சாதாரணப் ‘புளு’ காய்ச்சலாகக் கருதாமல் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

பறவைகளை நேரடியாகக் கையாளும் நபர்கள், இறைச்சிக் கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் உயிரிழந்தப் பறவைகளை அகற்றும் பணியாளர்கள் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் உள்ளிட்டத் தன்சுத்தத்தைப் பேணுவது கட்டாயமாகும்.

பொதுமக்கள் முற்றிலும் வேக வைக்கப்படாத அல்லது அரைகுறையாக வேக வைக்கப்பட்ட முட்டை மற்றும் இறைச்சிகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். இறைச்சியை நன்கு வேகவைத்து உண்பது பாதுகாப்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எந்தப் பகுதியிலாவது பறவைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்தால், உடனடியாகக் கால்நடை மருத்துவத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம்: அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share