×
 
☰

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தவெக அரசு மீது பாஜக தேசிய தலைமை விமர்சனம்!

காங்கிரஸ் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுதோல்வி என பாஜக தேசிய தலைமை கடுமையாக விமர்சித்துள்ளது.

தேனி மாவட்டக் கிளைச் சிறையில் இருந்து ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக் கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் மற்றும் மாநிலம் முழுவதும் குழந்தைகள் காணாமல் போகும் விவகாரத்தை முன்வைத்து, தமிழகத்தில் ஆளும் காங்கிரஸ் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டதாகப் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.   

இது தொடர்பாக பாஜகவின் தேசியத் தலைமை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பரபரப்பான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் - தவெக கூட்டணியின் கீழ் செயல்படும் அரசில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமான படுதோல்வியைச் சந்தித்துள்ளதாகச் சாடியுள்ளது.

குறிப்பாக, தேனி தேக்கம்பட்டி கிளைச் சிறையில் கைதி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி நாடகமாடி, சிறைக் கதவைத் திறந்த வார்டன்களைத் தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 விசாரணைக் கைதிகள் துணிகரமாகத் தப்பிச் சென்ற நிகழ்வு, சிறைத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டையும் அரசின் பலவீனமான கண்காணிப்பையும் அம்பலப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாகப் புழல் சிறையிலிருந்தும் கைதிகள் தப்பியோடிய நிலையில், தமிழகத்தின் சிறைச்சாலைகளிலேயே பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது.   

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்திலேயே இப்படியா? 4 சட்ட மேலவை இடங்களையும் கைப்பற்றிய பாஜக கூட்டணி!

மேலும், தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து குழந்தைகள் மர்மமான முறையில் காணாமல் போகும் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், அடிப்படை பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

"மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சிறைகளில் இருந்து கொடும் குற்றவாளிகள் சர்வசாதாரணமாகத் தப்பிச் செல்வதும், குழந்தைகள் காணாமல் போவதும்தான் இந்த ஆட்சியின் சாதனையா? தமிழக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்தது இதுபோன்ற ஒரு திறமையற்ற, அலங்கோலமான ஆட்சிக்காகத்தானா?" என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக மேலிடம், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றத் தவறிவிட்டதாகக் காட்டமாக விமர்சித்துள்ளது.   

இதையும் படிங்க: எல். முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடம்: பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share