பழனி தொகுதியை கொடுக்கல... பாஜக தொண்டர் தற்கொலை மிரட்டல்..! தொடர் போராட்டம்..!!
பழனி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த முடிவு அதிமுக தொண்டர்கள் மற்றும் சில தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ கூட்டணி வலுப்பெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இது 2021 தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த 20 தொகுதிகளை விட ஏழு அதிகம். பாஜகவின் இந்த அதிகரிப்பு கூட்டணியில் அதிமுகவின் மேலாண்மையை வெளிப்படுத்துவதாகக் கருதப்பட்டாலும், சில தொகுதிகளின் ஒதுக்கீடு உள்ளூர் மட்டத்தில் பிரச்சனையாக மாறியுள்ளது.
பாஜகவுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். மறுபக்கம் தங்கள் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கவில்லை என்று கூறி அந்த கட்சியினர் போராடி வருகின்றனர். தொகுதி பங்கீடு சமூகமாக நிறைவடைந்த நிலையில் தொண்டர்கள் மத்தியில் இது போன்ற சில சலசலப்புகள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கவில்லை எனக்கூறி அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.யில் மீண்டும் ஓர் அதிர்ச்சி... பேராசிரியரால் மாணவிக்கு பாலியல் தொல்லை..! கொந்தளித்த அண்ணாமலை..!!
மிகத் தீவிரமாக களப்பணி ஆற்றிய நிலையில் தங்கள் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கவில்லை எனக்கூறி பழனி தொகுதி பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொண்டர்கள் போராடினர். தொடர்ந்து தேங்காய் உடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக தொண்டர் ஒருவர் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் தாமரை வேண்டாம்..! போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுகவினர்..!!