×
 

அதிமுக வென்றால் 6 மாதத்தில் ஆட்சியை கலைப்பார்கள்! பாஜகவின் 'புது ஆட்டம்' குறித்து திருமாவளவன்  எச்சரிக்கை!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், ஆறு மாதங்கள் கூட பழனிசாமி முதல்வராக இருக்க மாட்டார்; ஆட்சியை பாஜக கலைத்துவிட்டு, புது ஆட்டத்தை தொடங்குவார்கள் என திருமாவளவன் விமர்சனம்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்துப் பரபரப்பான ஒரு அரசியல் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுக வெற்றி பெற்றால் அது அக்கட்சிக்கே வினையாக முடியும் என அவர் எச்சரித்துள்ளார்.

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை செய்த திருமாவளவன், அதிமுகவின் எதிர்காலம் குறித்துப் பேசுகையில் ஒருவேளை இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், ஆறு மாதங்கள் கூட எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்க முடியாது. பாஜக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு, தமிழகத்தில் ஒரு புது ஆட்டத்தைத் தொடங்குவார்கள் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக தனது காலூன்ற அதிமுகவை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர்: அதிமுகவை முழுமையாகத் தங்களுக்கு அடிமையாக்க பாஜக துடிக்கிறது. அதிமுகவின் வெற்றியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, பின்னர் அக்கட்சியைச் சிதைப்பதே டெல்லியின் திட்டம் எனச் சாடினார்.

இதையும் படிங்க: தருமபுரியில் பரபரப்பு! பிரேமலதா விஜயகாந்தை முற்றுகையிட்டு விசிக தொண்டர்கள் கேள்வி!

வாக்காளர்களிடையே பேசிய திருமாவளவன், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், சமூக நீதியைப் பாதுகாக்கவும் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம். அதிமுகவிற்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் மறைமுகமாகப் பாஜகவை வலுப்படுத்தும் என்பதை மக்கள் உணர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

திருமாவளவனின் இந்த விமர்சனத்திற்கு அதிமுக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வப் பதில் அளிக்கப்படவில்லை என்றாலும், கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமி இத்தகைய புகார்களைத் "தோல்வி பயத்தில் கூறப்படும் கற்பனை" என்று மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் எனப் பல்வேறு தலைவர்கள் கூறி வரும் நிலையில், திருமாவளவனின் இந்தப் 'புது ஆட்டம்' குறித்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட மறுத்தது! ஏமாளித்தனமா? அரசியல் தெளிவா? திருமாவளவன் விளக்கம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share