"நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு காரணமா?": கமிஷன் தந்த ஆலைகளைக் காப்பாற்றவா என நயினார் கேள்வி!
நொய்யலில் நுரை பொங்க ஷாம்பு தான் காரணம் என கூறியது அறியாமையிலா அல்லது கமிஷன் தந்த ஆலைகளை காப்பாற்றவா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்
திருப்பூர் நொய்யல் ஆற்றில் அபாயகரமான நச்சு நுரை பொங்கி வழிவதற்குக் கழிவுநீர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் ஷாம்பு, சோப்பு போன்றவைதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்ட விளக்கத்திற்குப் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரும் மூத்த தலைவருமான நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பொறுப்பற்ற அறிக்கை அதிகாரிகளின் அறியாமையா அல்லது கமிஷன் பெற்றுக்கொண்டு விதிகளை மீறும் ஆலைகளைக் காப்பாற்றவா என அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நொய்யல் ஆற்று தடுப்பணைகளில் மலைபோல் வெள்ளை நிற நுரை பொங்கி எழுந்து, சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்களைப் பாழ்படுத்தி வரும் காட்சி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ரீல்ஸ் போடுவதில் மட்டுமே கவனம்...': தவெக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்!
சாயக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் நேரடியாகத் திறந்துவிடப்படுவதே இதற்குக் காரணம் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நகர்ப்புறக் கழிவுகள் மற்றும் சோப்பு திரவங்கள் கலப்பதே காரணம் என தெரிவிக்கப்பட்ட விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வழிவதற்கு மக்கள் போடும் ஷாம்புதான் காரணம் என்று கூறியிருப்பது ஒட்டுமொத்த பொதுமக்களையும் முட்டாளாக்கும் செயலாகும்.
இது அதிகாரிகளின் அறியாமையால் கூறப்பட்டதா? அல்லது தங்களுக்குக் கமிஷன் கொடுத்துக் கொண்டிருக்கும் சட்டவிரோத சாய ஆலைகளைப் பாதுகாப்பதற்காகக் கூறப்பட்டதா? நொய்யல் ஆற்றைப் பாழாக்கும் நிறுவனங்கள் மீது எவ்விதத் தயவுதாட்சண்யமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத தமிழ்நாடு அரசு, தன் நிர்வாகத் தோல்வியை மூடிமறைக்க இத்தகைய அப்பட்டமான பொய்களை உதிர்த்து வருகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதை விடுத்து, ஆற்றைப் பாதுகாக்க உடனடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!