இதுக்கு ஒரு என்டே இல்லையா?... கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 19வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்... ராமநாதபுரத்தையும் விட்டுவைக்காத பரபரப்பு...!
கோவை மற்றும் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 19 வது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மாநகர போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியர் வளாகம் முழுவதும் சோதனை செய்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதே போல முக்கிய கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்நிலையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக ஆட்சியர் அலுவலக முன்னஞ்சலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் கோவை மாநகர வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஆட்சியர் அலுவலகம் வளாகம், அலுவலகங்கள் ஆகியவற்றில் போலீஸார் சோதனையிட்டனர். அப்போது மின்னஞ்சல் மிரட்டல் வெரும் புரளி என்பது தெரியவந்தது. ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2 மாதங்களில் சுமார் 18 முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், 19 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தொடர்ந்து இதே போல வெடிகுண்டு மிரட்டல் விடும் மர்ம நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு வழியா எச்.ராஜா சொன்னது நடந்துடுச்சி... 20 நாட்களுக்குப் பிறகு தலைகீழாக மாறிய திருப்பரங்குன்றம் நிலவரம்...!
இதேபோல், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையொட்டி இராமநாதபுரம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் மோப்ப நாய் பிரிவு உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் தேவசேனா என்ற மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்ற வாகனங்கள் மற்றும் ஆட்சியரின் இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிபொருட்கள் ஏதும் சிக்கவில்லை. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!