பிரதமர் வரும் நேரத்தில் இப்படியா?... கோவை, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ...!
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது
பிரதமர் மோடி இன்று மதியம் கோவை வரவுள்ள நிலையில் கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள தென்னிந்தியா இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார். இதனால் மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிள்ளது. கொடிசியா வளாகம் பிரதமரின் தனி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக இ.மெயில் முகவரிக்கு அடையாளம் தெரியாத முகவரியில் இருந்து வந்த மின்னஞ்சல் ஒன்றில் கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வந்த இ.மெயில் குறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 7 தளங்கள் கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு கண்டறியப்படாத நிலையில் மிரட்டல் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மெயில் ஐடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி இன்று கோவை வரவுள்ள சூழலில் இதுபோன்ற மிரட்டல் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இது பத்தாவது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இது இரண்டாவது முறையாக வந்த வெடிகுண்டு மிரட்டல் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் தணியாத பதற்றம்... நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு..!