×
 
☰

ராஜினாமா செய்ய வற்புறுத்தினார்கள்: முதல்வர் விஜய், வைகோ மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக எம்எல்ஏக்கள் புகார்!

முதலமைச்சர் விஜய்யை A1 ஆக சேர்த்து இந்த வழக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் கூட்டுச்சதி செய்து, தங்களைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்தி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கடையநல்லூர் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும், கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி மாநில லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரிகளை நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் மதிமுகவிலிருந்து முறைப்படி விலகி திமுகவில் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட படிவங்களை நிரப்பி வெற்றி பெற்றவர்கள்.

இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் விஜய்–சிங்கப்பூர் தூதர் சந்திப்பு..! முதலீடுகளை அதிகரிக்க திட்டமா..? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால், முதலமைச்சர் விஜய் பிற கட்சிகளின் ஆதரவுடனும் சில உறுப்பினர்களின் தயவுடனும் மைனாரிட்டி அரசை நடத்தி வருகிறார். இந்நிலையில், தங்களது அரசைத் தக்கவைத்துக் கொள்ளவும் பெரும்பான்மையைக் காட்டவும் பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் தீவிர குதிரை பேரத்தில் தவெக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டுச்சதி செய்துள்ளனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்களான தங்களைச் சந்தித்துப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

அவ்வாறு ராஜினாமா செய்தால் இடைத்தேர்தலுக்கான ஒட்டுமொத்த செலவுகளையும் தவெகவே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்றும், தேவையான அனைத்துப் பொருளாதாரத் தேவைகளையும் கவனித்துக் கொள்வதோடு இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகவும் முதலமைச்சர் விஜய்யும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் வைகோவிடம் கூறியுள்ளனர். இதனை வைகோ தங்களை நேரில் அழைத்துத் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்குத் தாங்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது புகாரில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாகத் தமிழக ஆளுநரிடம் ஏற்கனவே திமுக சார்பில் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டிருந்தும், இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாகப் புகார் அளித்துள்ளதால், ஆளுநரிடம் உரிய அனுமதி பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் முதலமைச்சர் விஜய்யை முதல் குற்றவாளியாக  சேர்த்தும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வைகோ, துரை வைகோ ஆகியோரை அடுத்தடுத்த குற்றவாளிகளாகச் சேர்த்தும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக ஆட்சியில் லஞ்சத்தை ஒழித்துவிட்டதாக உத்தமர் போல வேடமிடும் முதலமைச்சர் விஜய்யின் நாற்காலியின் நான்கு கால்களுமே ஊழல் கால்கள்தான் என்பது இதன்மூலம் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து, சுயலாபத்திற்காக இடைத்தேர்தல்களைத் திணிக்கும் இந்த ஜனநாயகக் கேலிக்கூத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கக் கடுமையான புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தீவிரமாக வலியுறுத்துவார்கள்.

சட்டமும் ஜனநாயகமும் அனைவருக்கும் பொதுவானது. அரசு அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படாமல் உடனடியாக முதலமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; லஞ்ச ஒழிப்புத்துறை இந்த விவகாரத்தில் பாராமுகமாக இருந்தால், நீதிமன்றத்தின் மூலம் திமுக சட்டத்துறை இதனை மிகத் தீவிரமாகச் சட்டப்படி எதிர்கொள்ளும்" என்று பரந்தாமன் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: தொக்காய் சிக்கிய மரகதம் குமரவேல்... தவெக தலையில் இறங்கியது பேரிடி... வேட்புமனுவில் வெளியான அதிர்ச்சி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share