வரும் பிப். 17ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! உற்றுநோக்கும் அரசியல் கட்சிகள்... சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!
வரும் 17ஆம் தேதி தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரும் 17ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்திருப்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தமிழக அரசின் கடைசி கட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முழுமையான பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால நிதி அறிக்கை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். சபாநாயகர் அப்பாவு, நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தத் தகவலை வெளியிட்டார். வரும் பிப்ரவரி 17ஆம் தேதி காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என்றும், அன்றைய தினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ளார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், அதே நாளில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்பதை முடிவு செய்யும் என்றும் கூறினார்.இந்த அறிவிப்பு திமுக தலைமையிலான ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் வருவது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கெனவே பிப்ரவரி 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அரசின் பல்வேறு திட்டங்கள், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாதவை, புதிய அறிவிப்புகள் ஆகியவை இந்த இடைக்கால நிதி அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: வஞ்சிக்கும் பாஜக... ஒத்து ஊதும் அதிமுக..! நிதிநிலை அறிக்கையை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இடைக்கால பட்ஜெட் என்பது பொதுவாக தேர்தலுக்கு முன்பு வரும் காலகட்டத்தில், அரசு செலவுகளைத் தொடர்வதற்கும், அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி தொடங்கும் நிலையில், பிப்ரவரி 20ம் தேதி மானியக் கோரிக்கை அளிக்கப்படும் எனவும் அறிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சி மட்டுமில்ல... திமுக கட்சியே CLOSE..! அமைச்சர்களை கேள்விகளால் துளைக்கும் மக்கள்... அதிமுக விமர்சனம்..!