"இன்றே தீர்ப்பு"..! இடைத்தேர்தல் முடிவும்... தகுதி நீக்க வழக்கும்.! பரபரப்பு அரசியல் களம்..!!
இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பும் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
தமிழக அரசியலில் சமீப காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்று அதிமுகவைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா விவகாரம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இந்த ஆறு பேரும் பின்னர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர். அவர்களில் மதுராந்தகம் தொகுதியின் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியின் சத்தியபாமா ஆகிய இருவரும் தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மீண்டும் களம் கண்டுள்ளனர். இந்த சூழலில் அவர்களின் ராஜினாமாவை ஏற்று சட்டப்பேரவை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆறு உறுப்பினர்களும் நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பின்போது கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து அவர்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு தொகுதிகளை காலியாக அறிவித்தார். இதற்கு எதிராக அதிமுக தலைமைக் கொறடா மற்றும் மற்றொரு கட்சித் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். ராஜினாமாக்கள் உண்மையான சுயவிருப்பத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக அரசியல் பேரம் பேசலின் விளைவாக ஏற்பட்டவை என்றும், தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது ராஜினாமாவை ஏற்பது சரியல்ல என்றும் அவர்கள் வாதிட்டனர்.சபாநாயகர் தரப்பு இதற்குப் பதிலளிக்கையில், சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் சுயவிருப்பத்துடன் ராஜினாமா செய்ததை உறுதி செய்த பிறகே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது. ராஜினாமா மற்றும் தகுதிநீக்கம் ஆகியவை தனித்தனியான விஷயங்கள் என்றும், ஒரு உறுப்பினர் தனது விருப்பப்படி பதவியை விட்டு விலக விரும்பினால் அவரை தொடர்ந்து பதவியில் இருக்கும்படி நிர்பந்திக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: திக்...! திக் திருப்பம்...!! - EVM திறக்கப்பட்டது...!! - டாப் கியரில் தவெக... துரத்தும் அதிமுக... திணறும் திமுக...!
உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மற்றொரு நீதிபதி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இன்று அந்தத் தீர்ப்பு வெளியாகவுள்ளது.இதற்கிடையில் காலியான தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் ஆறாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரு தொகுதிகளிலும் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரே அந்தக் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் என்பதால் இந்த முடிவு அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதே நாளில் உயர்நீதிமன்றத் தீர்ப்பும் வெளியாகவுள்ளதால் இரண்டு நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளன.ஆறு பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அவர்களின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தாராபுரத்தில் திடீர் ஷாக்... வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே சலசலப்பு... என்ன ஆச்சு?