கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
கோவை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு 60 நாட்கள் பரோல் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1998-ம் ஆண்டு நிகழ்ந்த கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 5 குற்றவாளிகளுக்கு 60 நாட்கள் நீண்டகால பரோல் வழங்கியிருப்பதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது 1998 பிப்ரவரி 14 அன்று அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த கோவையை ரத்தக்களறியாக்கிய தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை இந்த நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
அப்பாவிப் பொதுமக்கள் 58 பேரின் உயிர்களைப் பறித்து, 250-க்கும் மேற்பட்டோரின் வாழ்வை நிரந்தர ஊனமாக்கிய கொடூர பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த முகமது அன்சாரி, முகமது அலி, மொனப்பா என்கிற முகமது ஹசன், முகமது அஜம் மற்றும் நவாப் கான் உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளுக்கு 60 நாட்கள் நீண்டகால பரோல் வழங்கியிருப்பது மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க: கோவைக்கு ரூ.408 கோடி மதிப்பில் திட்டங்கள்..! முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!!
குடும்பத்தைக் காரணம் காட்டி இத்தகைய குற்றவாளிகளுக்குச் சலுகைகளும், நீண்டகால பரோல்களும் தாராளமாக வழங்கப்படுமானால், அன்று தங்கள் உற்றார், உறவினர்களைப் பறிகொடுத்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறாத வடுக்களுடனும் கண்ணீருடனும் வாழும் 58 அப்பாவி குடும்பங்களுக்கு என்ன நீதி?
இந்தக் கொடூரம் ஏதோ திடீரென உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்த தவறல்ல; பல மாதங்கள் சதித்திட்டம் தீட்டி, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதச் செயல். கொடூர வன்முறை மனநிலையில் இவ்வளவு பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்திய இத்தகைய குற்றவாளிகளை இரண்டு மாதங்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட அனுமதிப்பது, சமூக அமைதிக்கு விடுக்கப்படும் மாபெரும் அச்சுறுத்தலாகும்.
தேசத்தின் அமைதியையும் அப்பாவிகளின் உயிரையும் பறித்த குற்றவாளிகளுக்கு எந்தக் காலத்திலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் துளிக்கூட மன்னிப்போ, சலுகையோ காட்டப்படக் கூடாது. ஆகவே, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள இந்தக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 60 நாட்கள் பரோலை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: APJ அப்துல் கலாம் பிறந்தநாளில் வீ த லீடர்ஸ் அண்ணாமலையின் அதிரடி முயற்சி! இளைஞர்களை குறிவைத்து புதிய நகர்வு!