×
 

ஒரு கோடிப்பே....!! - திடுக்கிட்டு போன செங்குன்றம்... ‘அந்த பொருளுடன்’ 6 பேரை லாரியுடன் தூக்கிய போலீஸ்...!

சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

செங்குன்றம் அருகே ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியே கடத்தி வரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா லாரியுடன் பறிமுதல். 6 பேரை கைது செய்து மத்திய போதை பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் விசாரணை. முக்கிய கடத்தல் கும்பல் குறித்து விசாரணை.

ஒடிசா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சென்னை வழியே தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சென்னை மண்டல மத்திய போதை பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை நடத்தினர். அதில் பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியே கஞ்சாவை கடத்தி கொண்டு சென்னை எடுத்து வந்து கோவைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், கஞ்சா கடத்தலில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளில் ஒருவரான ரகு, மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருபவர் என  போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல், அவர்களின் வங்கி கணக்குகளை முடக்குவது குறித்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share