×
 

"பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

பத்திரிகை செய்திகள், சமூக வலைதள தகவல்களை வைத்து குதிரை பேரம் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட முடியாது எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

பத்திரிகை செய்திகள் மற்றும் சமூக வலைதளத் தகவல்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, போதிய ஆதாரங்கள் ஏதுமின்றி குதிரை பேரம் தொடர்பான வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) விசாரணைக்கு மாற்ற உத்தரவிட முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாகச் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ.பாலசுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஊத்தங்கரையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குத் திருவல்லிக்கேணி போலீசார் அவசரமாக வழக்குப்பதிவு செய்துள்ளதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்தது, மதிமுக மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவியும் கோடிக்கணக்கான ரூபாயும் தருவதாக ஆளுங்கட்சி அமைச்சரே பேரம் பேசியதாக வெளியான புகார்கள் குறித்தும், தம்மைக் தவெக-வில் இணையும் படி போலீசார் நிர்பந்தித்ததாக திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி, "தமிழகத்தில் நடந்து வரும் குதிரை பேரங்களை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. ஆளுங்கட்சி எல்.எம்.ஏ. அளித்த புகாரில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், ஐந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தமான புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது பாரபட்சமானது" என வாதிட்டார். இதற்குப் பதிலளித்து தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், "பாதிக்கப்பட்டுப் புகார் அளித்தவர்கள் யாரும் இந்த வழக்கைத் தொடரவில்லை. மாநில போலீசார் இந்த வழக்கில் பலரைக் கைது செய்து, முறையான ஆதாரங்களைச் சேகரித்து வருவதால் வழக்கைச் சிபிஐ-க்கு மாற்றக் கூடாது" என்று வாதிட்டார்.

இதையும் படிங்க: மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதியரசர்கள் இன்று தங்களின் இறுதித் தீர்ப்பை வழங்கினர். நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில், ஊடகங்களில் வரும் செய்திகளையோ அல்லது சமூக வலைதளப் பதிவுகளையோ மட்டுமே முதன்மை ஆதாரமாகக் கொண்டு, எவ்வித நேரடிச் சட்டப்பூர்வ சான்றுகளும் இன்றி இத்தகைய விவகாரங்களை உயர் விசாரணை அமைப்பான சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறி, வழக்கை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: "குதிரை பேரம்"..! சிபிஐ விசாரணை கேட்டு டிமாண்ட்... ஹைகோர்ட்டில் பரபரப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share