பொன்முடிக்கு எதிரான வழக்கு.. காவல்துறைக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..??
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ-வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பேசிய பொன்முடி, சைவ-வைணவ மதங்களை அவமதிக்கும் விதமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பொன்முடி பகிரங்க மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார். இருப்பினும், அவரது தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்படவில்லை, இது பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பலர் இந்த நடவடிக்கையை “கண்துடைப்பு” என விமர்சித்து, அவரது அமைச்சர் பதவியையும் உடனடியாக பறிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகநாத் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: வருமான வரி பாக்கி: ஜெ.-வின் வாரிசுக்கு பறந்த நோட்டீஸ்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
பொன்முடி மீது 2006-2011 ஆட்சிக்காலத்தில் சொத்துக் குவிப்பு மற்றும் செம்மண் குவாரி முறைகேடு வழக்குகள் உள்ளன. 2023 டிசம்பரில், சென்னை உயர் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்து, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால், அவர் தனது எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவிகளை தற்காலிகமாக இழந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து, 2024 மார்ச்சில் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தற்போது, ஆபாச பேச்சு சர்ச்சை மற்றும் மக்கள் எதிர்ப்பு காரணமாக, பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், பொன்முடி கடந்த ஏப்ரல் 27ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையில் புதிய இலாகா ஒதுக்கீடுகள் மற்றும் மனோ தங்கராஜின் மறுநியமனம் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே பொன்முடியின் ஆபாச பேச்சு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இன்று நீதிபதி என். சதீஷ் குமார் அமர்வில் நடைபெற்ற விசாரணையில், காவல்துறை தரப்பில், புகார்கள் மீது விசாரணை நடத்தி முகாந்திரம் இல்லை என முடித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிபதி, “புகார்களில் முகாந்திரம் இல்லை என எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது?” எனக் கேள்வி எழுப்பினார்.
பொன்முடியின் பேச்சு 1972-ல் சமூக சீர்திருத்தவாதி ஒருவரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது என அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கினார். இதையடுத்து, பொன்முடியின் முழு பேச்சு வீடியோ மற்றும் 1972-ன் கருத்துகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சாக உள்ளதாகவும், அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் விமர்சனங்கள் எழுந்தன. வழக்கறிஞர் ஜெகநாத் உள்ளிட்டோர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்த சீமான்.. காவல்துறைக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்..!!