வழக்குகளுக்கு பயந்து தவெகவுக்கு தாவலா?... விஜயபாஸ்கர்கள் மேல் உள்ள வழக்குகள் என்னென்ன?
எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் எதிரான பல்வேறு வழக்குகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் மீதான வழக்குகளுக்கு அஞ்சியே தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் முடிவை எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், அவர்கள் அதிமுக தலைமை மீதான அதிருப்தியே இந்த முடிவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர்:
முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது மொத்தம் 30 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு, ரூ.100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கு, தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கனிமவள விதிமீறல் தொடர்பான வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையும் படிங்க: திங்கட்கிழமை தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!
2016 முதல் 2021 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மிரட்டி அபகரித்ததாக சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது, கரூரில் தபால் வாக்குகள் எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரியை மிரட்டியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கரூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ஆற்று மணலை பதுக்கி வைத்திருந்ததாக கனிமவள சட்டத்தின் கீழும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதவிர, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சி.விஜயபாஸ்கர்:
இதேபோல், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது 12 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமாக, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.
மேலும், 2016 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்குச் சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையில், கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அதேபோல், விதிமுறைகளை மீறி திருவள்ளூரில் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி வழங்கியதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.
எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் எதிரான பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவே அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர் என்ற விமர்சனங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன. அதே நேரத்தில், இந்த குற்றச்சாட்டை இருவரும் ஏற்கவில்லை; அதிமுக தலைமையின் செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தியே தங்களது முடிவுக்குக் காரணம் என்று அவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்
இதையும் படிங்க: அண்ணன் எடப்பாடியார் அவர்களே... கண்ணீருடன் விடைபெறுகிறேன்... ர.ர.க்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கமான கடிதம்...!