×
 

#BREAKING விடிந்ததுமே முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு இறங்கிய பேரிடி... உச்சக்கட்ட அதிர்ச்சியில் திமுக...!

தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு.. காரணம் என்ன?

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு மீது வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் குறித்தும், அமைச்சர் நிர்மல் குமார் குறித்தும் அவர் தவறாகவும், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த சென்னை அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் என்ற முறையில், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், ஆர்ப்பாட்டத்தின்போது சேகர்பாபு, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் குறித்து கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாகவும், இந்தப் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 7 நிமிடங்கள் 12 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை ஆதாரமாகக் கொடுத்து இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சேகர்பாபு பேசுவது முழுமையாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோரை பொது மேடையில் அசிங்கமாகவும், அநாகரிகமாகவும் பேசும் வகையில் பல்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடம் மனக்குமுறலை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிநபரை அவமதிக்கும் வகையிலும் அமைச்சர் நிர்மல் குமார் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளமான ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாஜக மற்றும் திமுக தொண்டர்களிடையே கலவரம் மற்றும் பகையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும் சேகர்பாபு பேசியிருப்பதாகவும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், வடக்கு கடற்கரை போலீசார் திமுக சார்பில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தின் வீடியோ ஆதாரங்களை முழுமையாகச் சேகரித்த பின்னர், சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் பேசுவது, ஆபாசமாகப் பேசுவது, இரு தரப்பினரிடையே தூண்டுதலை ஏற்படுத்துவது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வடக்கு கடற்கரை போலீசார் சார்பில் சேகர்பாபுவுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share