காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி! மே மாதத்திற்காக 2.5 டி.எம்.சி தண்ணீரை திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு!
மே மாதம் தமிழ் நாட்டிற்கு 2.5டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் காவிரியில் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவி வரும் இழுபறிக்கு இடையே, மே மாதத்திற்கான தண்ணீரைத் திறக்கக் கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு வர வேண்டிய 2.5 டி.எம்.சி (TMC) தண்ணீரை எவ்விதத் தடையுமின்றி கர்நாடகம் உடனடியாகத் திறந்து விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் இன்று ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் நீர்வளத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் சார்பில் நீர்வளத் துறைச் செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு வாதிட்டனர். கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அணைகளின் தற்போதைய நீர்வரத்து, நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்த புள்ளிவிவரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், மே மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2.5 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் எனத் தமிழக அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் உயரும் மதுபானங்களின் விலை..!! மே 1ம் தேதி முதல் அமல்..!! 'குடி'மகன்கள் ஷாக்..!!
தமிழக அதிகாரிகளின் நியாயமானக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர், வரவிருக்கும் மே மாதத்தில் தமிழகத்திற்குத் தேவையான 2.5 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு முறைப்படி உத்தரவிட்டார்.
கடுமையான கோடை வெயில் நிலவி வரும் சூழலில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வரத்து கிடைப்பதன் மூலம், டெல்டா மாவட்டங்களில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குறுவை சாகுபடிப் பணிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் முடிந்து புதிய அரசு அமையக் காத்திருக்கும் வேளையில், காவிரி விவகாரத்தில் கிடைத்துள்ள இந்தச் சாதகமான உத்தரவு ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!