தாது மணல் முறைகேடு வழக்கு.. திடீர் ஆய்வில் சிபிஐ.. ஷாக்-ஆன கனிமவள நிறுவனங்கள்..!
தாது மணல் முறைகேடு வழக்கில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடலோர கனிமவள நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.
பொதுவாக தாது மணலில் அதிக அளவில் கதிர் இயக்கத் தன்மை கொண்ட கனிமங்கள் மற்றும் அதிக விலை மதிப்புடைய தாது உப்புக்கள் நிறைந்து இருக்கின்றன. இத்தகைய தன்மையை கொண்ட தாது மணலானது திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்த நிலையில் இதனை அறிந்த தனியார் மைனிங் நிறுவனங்கள் சட்டவிரோதமாக இந்த தாது தன்மையை கொண்ட மணலை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அந்த வகையில் வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ்வோர்ல்ட் கார்னெட், பீச் மினரல்ஸ், இண்டஸ்ட்ரியல் மினரல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
இதையும் படிங்க: வரி ஏய்ப்பு புகார்... கட்டுக்கட்டாய் ஆவணங்கள்... சிபிஐ தூண்டிலில் வசமாக சிக்கிய வைகுண்டராஜன் அண்ணாச்சி
வியாபார நோக்கில் இத்தகைய சட்ட விரோதமாக செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகளான கரன் டீப் சிங் பேடி, சத்திய பிரதா சாகு ஆகியோர் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேலும் இந்த விசாரணையில் தமிழகத்தில் தாது மணல் கடத்தல் மூலம் 5832 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்த நிலையில், தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் முதற்கட்டமாக சிபிஐ அதிகாரிகள் தாது மணல் முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்ட தனியார் கனிமவள நிறுவனங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அதன்படி திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள கடலோர கனிமவள நிறுவனங்கள் மற்றும் சென்னையில் மூன்று இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் இவ்வளவா?... மீண்டும் ஃபார்முக்கு வந்த கோயமுத்தூர்... துள்ளி குதிக்கும் கோவை வாசிகள்...!