100 நாள் இல்லை… இனி 125 நாள்!! பார்லியில் புதிய மசோதா தாக்கல்!! சிறப்பம்சங்கள் என்ன?
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதாவை லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து வருகிறது. இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) 2005-க்கு மாற்றாக புதிய மசோதாவை டிசம்பர் 16-ஆம் தேதி லோக்சபாவில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகம் செய்தார். “விக்சித் பாரத் – கிராமின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி மிஷன் (VB-G RAM G) மசோதா 2025” என்று பெயரிடப்பட்ட இந்த மசோதா, ஊரக குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
தற்போதைய 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி, நீர் பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாடு ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ராகுல்காந்தியை சமாளிக்கிறது எப்படி? கேள்விகளுடன் காத்திருக்கும் காங்.,! பாஜக ஆலோசனை!
மசோதாவை அறிமுகம் செய்த சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், “மகாத்மா காந்தியை மட்டும் நம்புவதில்லை, அவரது கொள்கைகளையும் மோடி அரசு பின்பற்றுகிறது. முந்தைய அரசுகளை விட கிராமப்புற வளர்ச்சிக்கு அதிகம் செய்துள்ளோம்” என்றார்.
ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, “திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு 40 சதவீதமாக குறைத்துள்ளது. மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவது ஏன்?” என்று குற்றம்சாட்டினார். திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் பெயர் மாற்றம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா அதை ஏற்க மறுத்துவிட்டார்.
மசோதா அறிமுகத்தின் போது லோக்சபாவில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தி, மசோதாவை திரும்பப் பெறக் கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அமளி தொடர்ந்ததால் லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த புதிய மசோதா ஊரக வேலைவாய்ப்பு உரிமையை பலவீனப்படுத்துவதாகவும், மாநிலங்களுக்கு அதிக நிதி சுமையை ஏற்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மசோதா மீதான விவாதம் தொடர்ந்து அனல் பறக்கிறது.
இதையும் படிங்க: இன்னைக்கு மோடி! நாளைக்கு ராகுல்காந்தி!! லோக்சபாவில் விவாதம் துவக்கி வைப்பு!! கவுன்டவுன் ஸ்டார்ட்!