“பயணிகள் கவனத்திற்கு!” சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை மூடல்! விமான சேவைகள் பாதிக்கும் அபாயம்?
சென்னை விமான பன்னாட்டு நிலையத்தின் முதன்மை ஓடுதளத்தை முழுமையாகச் சீரமைக்கும் பணிகளை வரும் 2026-ஆம் ஆண்டில் தொடங்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 470-க்கும் மேற்பட்ட விமானங்கள் கையாளப்பட்டு வருகின்றன. இங்குள்ள 3.66 கிலோமீட்டர் நீளம் கொண்ட பிரதான ஓடுதளம் கடைசியாக 2015-ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. பாதுகாப்பு விதிகளின்படி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓடுதளத்தைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் என்பதால், வரும் 2026 ஜனவரியில் இதற்கான பணிகளைத் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆனால், போக்குவரத்துப் பாதிப்பைத் தவிர்க்கப் பகுதி பகுதியாகச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், இப்பணிகள் நிறைவடைய 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை ஆகலாம் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இரண்டாவது ஓடுபாதையை மாற்றாகப் பயன்படுத்தலாம் என்றாலும், அதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. அதன் 2.89 கி.மீ நீளத்தில், தற்போது 2 கி.மீ மட்டுமே பயன்படுத்த முடிகிறது. மீதமுள்ள .89 கி.மீ தூரத்தில் உயரமான கட்டிடங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் என 176 தடைகள் இருப்பதால், அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், பிரதான ரன்வே பணிகள் நடக்கும் போது விமானத் தரையிறக்கம் மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அதேநேரம், டாக்ஸி செல்லும் வழிகள் அகலப்படுத்தப்பட்டுள்ளதாலும், புதிய ‘ஹோல்டிங் பாயிண்ட்’ உருவாக்கப்பட்டுள்ளதாலும், ஒரு மணி நேரத்திற்கு 50-க்கும் மேற்பட்ட விமானங்களைக் கையாளும் வகையில் உள்க்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தின் கையாளும் திறனை அதிகரிக்க ஏற்கனவே இணைப்புச் சாலை விரிவாக்கம், வளைவுகளைச் சீரமைத்தல் போன்ற மேம்பாட்டுப் பணிகள் விரைவாக நடந்து முடிந்துள்ளன. சரக்கு விமாங்களை நிற்கும் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு முன்னேற்றங்கள் செய்துள்ள நிலையிலும், ஓடுதளச் சீரமைப்புப் பணி நடக்கும் போது விமானங்களை தரையிறங்குவதில் கால மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், பயணிகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் நள்ளிரவு மற்றும் போக்குவரத்து குறைவான நேரங்களில் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2026-ல் சென்னை வான்பரப்பில் விமானங்களின் நெரிசல் சற்றே அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தப்பாட்டம் முதல் சிலம்பாட்டம் வரை! பொங்கல் கலைத்திருவிழாவிற்கு தயாராகும் தலைநகரம் - முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!
இதையும் படிங்க: “சென்னைக்கு இன்னொரு வைரம்!” – புத்துயிர் பெற்ற விக்டோரியா ஹால், நாளை திறப்பு!