×
 

ஹாப்பி கிறிஸ்துமஸ்!! கொண்டாட்டத்துக்கு தயாராகும் சென்னை! 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

சென்னையில் உள்ள முக்கியமான 350 கிறிஸ்தவ தேவாலயங்கள் இருக்கும் பகுதிகளில் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (டிசம்பர் 25, வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மாநகரில் பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாட போலீசார் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று அதிகாலை முதலே கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு செல்வார்கள். இதனால் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்பதால், நாளை இரவு முதல் இரு நாட்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள மயிலாப்பூர் சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோயில், பாரிமுனை அந்தோணியார் கோயில், அண்ணா சாலை புனித ஜார்ஜ் கதீட்ரல், சைதாப்பேட்டை சின்னமலை கோயில் உள்ளிட்ட முக்கியமான 350 கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் வீடு, காரில் வெடிகுண்டு வச்சிருக்கேன்! போன் போட்டு மிரட்டிய வாலிபர்! தட்டித்தூக்கிய போலீஸ்!!

இந்தப் பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு போன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்கவும் சாதாரண உடையில் மாறுவேடத்தில் போலீசார் ரோந்து செல்லவுள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

தேவாலயங்கள் அமைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஏற்பாடுகள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

மேலும், மோட்டார் சைக்கிள் பந்தயம், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் சென்னைவாசிகள் பயமின்றி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 21 வருஷம் தலைமறைவு… பெயர் மாத்தி, சாம்பிராணி ஊதி தப்பித்த கொலைகாரன்! SIR படிவத்தால் தட்டித்தூக்கிய போலீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share