×
 

சென்னையில் பரபரப்பு... கல்லூரி மாணவர்களுக்கு விரட்டி, விரட்டி அரிவாள் வெட்டு... சக மாணவர்கள் 3 பேர் கைது...!

இந்த மோதலில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில், இதுதொடர்பாக தற்போது மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் "ரூட் தலை" விவகாரம் தொடர்பாக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் நேற்று மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில், இதுதொடர்பாக தற்போது மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏம்ராஜ் மற்றும் நிதீஷ்குமார் ஆகிய இருவரும் வழக்கம்போல் நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி, சென்ட்ரல் மெட்ரோ சுரங்கப்பாதை வழியாக பச்சையப்பன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென கத்தி மற்றும் அரிவாளுடன் இருவரையும் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர். இதில் ஏம்ராஜ் மற்றும் நிதீஷ்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பெரியமேடு போலீசார் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, தாக்குதல் நடத்திய மாணவர்கள் தங்களை அடையாளம் காண முடியாத வகையில், அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவை கத்தியால் உடைத்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையும் படிங்க: சென்னை நீட் போராட்டத்தில் முதல்வர் விஜய்க்கு எதிரான கோஷங்கள்?! தவெக - இ.கம்யூ. கூட்டணியில் சலசலப்பு?

இதையடுத்து, அருகிலிருந்த பிற சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சரத்குமார், பிரகதீஷ் மற்றும் புவனேஸ்வரன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பதும், தாக்கப்பட்ட மாணவர்களும் தாக்குதல் நடத்திய மாணவர்களும் அனைவரும் முதலாம் ஆண்டு மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், "ரூட் தலை" யார் என்ற ஆதிக்கப் போட்டி காரணமாக ஏற்பட்ட மோதலின் வெளிப்பாடாகவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், அதன்பிறகே இரண்டு மாணவர்களையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இதையும் படிங்க: கூரியரில் நியூசிலாந்துக்கு போதைப்பொருள் கடத்தல்! சர்வதேச போதை கும்பல் அம்பலம்! சென்னை நபர் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share