"பாஜக லீடர்னு சொன்னா விட்ருவாங்களா?" 4.5 கோடி ட்ரேடிங் மோசடி புகாரில் கைதான முக்கிய பிரமுகர்!
ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி செய்த புகாரில் ஓசூரில் பதுங்கி இருந்த, பாஜகவின் மாநில மகளிரணி துணைத் தலைவி மதிவதனகிரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆன்லைன் ட்ரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாகக் கூறி சுமார் 4.5 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், பாஜகவின் மாநில மகளிரணி துணைத் தலைவி மதிவதனகிரியை சென்னை சைபர் கிரைம் போலீசார் ஓசூரில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திப் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டுத் தலைமறைவானது தொடர்பாக எழுந்த புகார்கள், பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான மதிவதனகிரி மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது ஆதாரங்களுடன் சிக்கியுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, செல்போன் சிக்னல்களை வைத்து அவர் ஓசூரில் பதுங்கியிருந்ததை உறுதி செய்த போலீசார், அங்கு விரைந்து சென்று அவரைத் தங்களது பிடியில் கொண்டு வந்தனர்.
கைதான மதிவதனகிரி, கடந்த சில மாதங்களாகத் தனக்குத் தெரிந்தவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் "ஆன்லைன் ட்ரேடிங்" தொழிலில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிப் பலரும் லட்சக்கணக்கில் அவரிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் சுமார் 4.5 கோடி ரூபாய் வரை வசூலானதும், பணத்தைக் கொடுத்தவர்களுக்கு லாபமும் தராமல், அசலையும் திருப்பித் தராமல் அவர் இழுத்தடித்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் பரபரப்பு புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: "யார் யாருக்கு எத்தனை சீட்?" அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு.. இன்று தொடங்குகிறது முதற்கட்ட பேச்சுவார்த்தை!
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த மதிவதனகிரியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அவர் ஓசூரில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் தங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, நேற்று நள்ளிரவில் அங்கு சென்ற போலீசார் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து லேப்டாப், பல செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ள அவரிடம், மோசடி செய்யப்பட்ட பணம் எங்குப் பரிமாற்றம் செய்யப்பட்டது? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதையும் படிங்க: "பாமக வருகை.. நள்ளிரவில் நடந்த டெல்லி டீல்!" அமித்ஷா - இபிஎஸ் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை!