சென்னையில் 2வது நாளாக அமலாக்கத்துறை ரெய்டு!! நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலகங்களில் சல்லடை!
சென்னையில் வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகள் ஆகிய இடங்களில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: சென்னையின் பிரபல நகை வியாபார மையங்களான சௌகார் பேட்டை, தியாகராய நகர், பாண்டி பஜார் பகுதிகளில் வரி ஏய்ப்பு புகார்கள் அடிப்படையில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்தும் சோதனை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிரமாக நடந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கிய இந்த சோதனை, இரவு முழுவதும் தாண்டி விடிய விடிய நீடித்து, புதன்கிழமை காலை வரை தொடர்ந்து நடக்கிறது. இதில் கோடிக்கணக்கில் கணக்கில் இல்லாத பணம், ஆவணங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகார்கள் எப்படி வந்தது? சென்னையின் நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சில தங்கம், வைர நகை வியாபாரிகள் வரி ஏய்த்து, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ரகசியத் தகவல்கள் வருமான வரித் துறைக்கு வந்தன. இதைத் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்திய அதிகாரிகள், பல வியாபாரிகளிடம் ஆதாரங்கள் கண்டுபிடித்தனர்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்... முழு விவரம்...!
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை பாண்டி பஜாரில் நாதமுனி தெருவில் உள்ள ஒரு பெரிய நகை வியாபாரியின் அலுவலகம் மற்றும் கடை, தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் இயங்கும் பிரபல நகைக் கடை, வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள வைர நகைக் கடை, நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஒரு நகை வியாபாரியின் அலுவலகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடங்கியது.
இந்த சோதனைகள் எப்படி நடந்தது? வருமான வரித் துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் உதவியுடன் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மேலாண்மை நிறுவனத்திலும், பிற இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.
இரவு முழுவதும் நடந்த இந்த விசாரணையில், வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள், கணக்கில் இல்லாத பணம், தங்க நகைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் சோதனை இன்னும் முடியவில்லை, அதிகாரிகள் ஆவணங்களை சோதித்து, கணக்குகளை சரிபார்த்து வருகின்றனர்.
வருமான வரித் துறை தரப்பில், "சோதனை முழுமையாக முடிந்த பிறகே கைப்பற்றப்பட்ட பணம், நகை, ஆவணங்களின் விவரங்களை வெளியிடலாம். இது வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகார்கள் அடிப்படையில் நடக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சென்னை நகை வியாபாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரிகள் பதட்டத்தில் உள்ளனர், அதே நேரம் பொதுமக்கள் "இப்படி ஏய்ப்பு செய்வதா?" என்று விவாதிக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜய் எல்.கே.ஜி தான் படிக்கிறாரு! கத்துக்க இன்னும் நெறைய இருக்கு! வரட்டும்! பொன்முடி வார்னிங்!