×
 

பயணிகள் கவனத்திற்கு! நாளை மின்சார ரயில் சேவைகள் ரத்து! முழு விவரம் இதோ!

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக புற நகர் ரயில் சேவைகள் நாளை ( டிசம்பர் 28 ) ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே மக்கள் அன்றாடம் தினசரி அலுவலகம் செல்வோர், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் பயணத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த ரத்து அறிவிப்பால், பயணிகள் மாற்றுப் போக்குவரத்து வசதிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் குறைந்த கட்டணத்திலும், நெரிசல் இல்லாமலும் பயணிக்க லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் மின்சார ரயில்களையே மலைப் போல நம்பியுள்ளனர். இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் வழித்தடத்தில், மீஞ்சூர் மற்றும் அத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே அவசரப் பராமரிப்புப் பணிகள் நாளை (டிசம்பர் 28, 2025) மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில குறிப்பிட்ட மின்சார ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அறிவிப்பின்படி, நாளை காலை 9 மணிக்குச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.55 மணி மற்றும் 11.25 மணிக்குத் திரும்ப வேண்டிய ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரை ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை, நாளை காலை 9.40 மணிக்குச் சென்னை கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும், மறுமார்க்கமாகக் கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை கடற்கரைக்குக் காலை 10.55 மணிக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: வாட்டர் கேனில் கடத்திய பெண் கைது!

இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையினால் சென்னை வடக்கு புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும், அவசர வேலைகளுக்குச் செல்வோரின் நலன் கருதிப் பயணிகள் மாற்றுப் பேருந்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் மாலை முதல் ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என்றும், இது குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளப் பயணிகள் ரயில்வே நேர அட்டவணையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ₹32.62 கோடியில் புத்துயிர் பெற்ற சென்னையின் பாரம்பரியம்! – விக்டோரியா ஹாலை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share