சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை..!! மாநகராட்சி பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..!!
சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவை உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தில் மேயர் பிரியா அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக, சென்னையின் புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் ரோப் கார் (கேபிள் கார்) சேவை அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. இத்திட்டம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவையை கொண்டுவரும் திட்டத்திற்கு சென்னை மாநகராட்சி ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது. ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. முதற்கட்டமாக, கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ்) தொடங்கி அண்ணா நினைவிடம் (அண்ணா சதுக்கம்) வரையிலான பகுதியில் இந்த சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க 2024ஆம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டது.
இதையும் படிங்க: 4வது ஆண்டில் உக்ரைன் - ரஷ்யா போர்! முரண்டு பிடிக்கும் தலைவர்கள்! பலனளிக்குமா 3ம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை!
தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் மெரினாவில் மண் பரிசோதனை மேற்கொண்டது. இது மீனவர் சமூகத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு முறையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த திட்ட மதிப்பு சுமார் ரூ.285 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரோப் கார் சேவை 50 முதல் 100 அடி உயரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பயணிகள் மெரினா கடற்கரையின் அழகையும், கடல் காற்றையும், நகரக் காட்சிகளையும் பறவைப் பார்வையில் ரசிக்க முடியும்.
கேபின்கள் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும் என்பதால், வெயில் காலங்களிலும் வசதியாக பயணிக்கலாம். ஒரு கேபினில் 8 முதல் 10 பேர் வரை அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தில் இரண்டு இடைநிறுத்தங்கள் (ஸ்டேஷன்கள்) அமைக்கப்பட உள்ளன. ஒன்று கண்ணகி சிலை அருகிலும், மற்றொன்று விவேகானந்தர் இல்லம் பகுதியிலும் இருக்கும். முழு சேவையும் சூரிய மின்சக்தியால் இயக்கப்படும் என்பதால், இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த போக்குவரத்து முறையாக விளங்கும்.
கடலோரப் பகுதியில் அமைவதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி பெறுவது அவசியமான நடைமுறையாக உள்ளது. தற்போது சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அறிக்கை பெறப்பட்டவுடன், கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் கோரப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் நிறைவேறினால், மெரினா கடற்கரை சுற்றுலாத் தலமாக மேலும் பிரபலமடையும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை அளிப்பதோடு, சென்னையின் நவீன முகத்தை உலகிற்கு காட்டும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னை மக்களுக்கு புதிய சுற்றுலா வசதி கிடைப்பதுடன், நகரின் அழகை உயரத்திலிருந்து ரசிக்கும் வாய்ப்பும் உருவாகும். ஆய்வுகள் முடிந்து அனுமதிகள் பெறப்பட்ட பின்னர், பணிகள் விரைவாக தொடங்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊட்டியில் மல்டி கார் பார்க்கிங்.. அதுவும் விரைவில்..!! சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பிராமிஸ்..!!