சென்னையில் 2 நாட்களுக்கு மழை இருக்குமாம்..!! வானிலை கொடுத்த ஜில் அப்டேட்..!!
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய பகுதிகளில் சுமார் 3.1 கிலோமீட்டர் முதல் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (மே 23) நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (மே 24) மற்றும் 25-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை விவசாய நிலங்களுக்கு நன்மை பயக்கும் என்றாலும், நகர்ப்புறங்களில் வெள்ளத் தேக்கம், போக்குவரத்து பாதிப்பு போன்ற சிரமங்களை ஏற்படுத்தக்கூடும்.
26-ம் தேதி கோயம்புத்தூர், திருப்பூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம். 27 முதல் 29-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என முன்னறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை குளுகுளுவென மாறப்போகும் மாவட்டங்கள்..!! லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கா..??
சென்னை வானிலை: இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 28-29 டிகிரியாக இருக்கும். நாளை அதிகபட்சம் 39-40 டிகிரியை எட்டக்கூடும்.
மீனவர்கள் எச்சரிக்கை: இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40-50 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ வரை வீசக்கூடும். 25 முதல் 27 வரை தென் தமிழக கடல் பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் மழை நேரங்களில் மின்னல் தாக்கம், மரங்களின் கிளைகள் உடைதல், சாலை வெள்ளம் ஆகியவற்றில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கப்போகும் மழை..!! லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க..!!