“இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் மெட்ரோ!” போரூர் - வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி!
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் மிக முக்கியமான பகுதியான போரூர் - வடபழனி இடையேயான சோதனை ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தச் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினைத் தொடர்ந்து, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் கோபால் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்போது ஆற்காடு சாலையின் போக்குவரத்து நெரிசல் பாதியாகக் குறையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக், "இன்று போரூர் முதல் வடபழனி வரையிலான 5.5 கிலோமீட்டர் தூரத்திற்குச் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம். தொடக்கத்தில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மட்டுமே ரயிலை இயக்கத் திட்டமிட்டிருந்தோம்; ஆனால், மக்களின் தேவையையும் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு, அதனை வடபழனி வரை நீட்டிக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது பணிகள் முடிக்கப்பட்டுச் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் ரயிலின் வேகத்தை அதிகரித்து, மணிக்கு 35 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி முழுமையான சோதனையை முடிப்போம்" என்றார்.
தொடர்ந்து பேசிய சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் கோபால், "மெட்ரோ பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; வரும் ஜூன் மாத இறுதிக்குள் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை ரயிலை இயக்குவதற்கான பணிகளைத் திட்டமிட்டுள்ளோம். வடபழனியில் ஏற்கனவே உள்ள முதல் கட்ட மெட்ரோவுடன் இந்தப் புதிய வழித்தடத்தை இணைப்பதற்கான 'ஸ்கைவாக்' பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பூந்தமல்லி, போரூர் பகுதி மக்கள் மிகக் குறைந்த நேரத்தில் நகரின் மையப்பகுதியை அடைய முடியும்" எனத் தெரிவித்தார். இந்தச் சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்குப் பிறகு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த வழித்தடம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் நாளைக்கு ஸ்கூல் இருக்கா..? இல்லையா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!
இதையும் படிங்க: 49-வது சென்னை புத்தக காட்சி தொடக்கம்! 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது வழங்கிய முதல்வர்!