அசத்தல் வசதிகளை கொண்டு வரும் சென்னை மெட்ரோ.. இப்போ புதுசு என்ன தெரியுமா..??
ஊபர் செயலியில் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதன்மூலம் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மேலும் 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில், நகரின் பொதுப் போக்குவரத்து முறையில் புரட்சி ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) பல்வேறு நவீன வசதிகளை வழங்கி வருகிறது. மெட்ரோ நிலையங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்தவாறு வடிவமைக்கப்பட்டு, லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் தொடு உணர் பாதைகளுடன் உள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, நிலையங்களில் CCTV கண்காணிப்பு, தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் அவசரகால தொடர்பு வசதிகள் உள்ளன.
இதையும் படிங்க: இனி இதை பயன்படுத்தினால் அபராதம் வசூல்.. பயணிகளுக்கு செக் வைத்த CMRL..!
பயணச்சீட்டு வாங்குவதை எளிதாக்க, QR குறியீடு மூலம் டிக்கெட் வாங்கும் வசதி, WhatsApp (+91 83000 86000), Paytm, PhonePe மற்றும் தேசிய பொது போக்குவரத்து அட்டை (NCMC) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பயண அட்டைகளை எளிதாக ரீசார்ஜ் செய்யும் வசதியும், CMRL மொபைல் செயலி மூலம் பயணத் திட்டமிடல், நிலையத் தகவல்கள் மற்றும் அருகிலுள்ள உணவகங்கள், தங்குமிடங்கள் பற்றிய விவரங்களும் கிடைக்கின்றன.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மேலும் வசதியை ஏற்படுத்தும் வகையில், ஊபர் (Uber) செயலியில் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பான ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உடனான கூட்டாண்மையின் மூலம் இந்தப் புதிய வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், பயணிகள் ஊபர் செயலி வழியாக QR குறியீடு அடிப்படையிலான மெட்ரோ டிக்கெட்டுகளை எளிதாக வாங்கலாம். இந்த வசதி, பயணிகள் நீண்ட வரிசைகளில் நிற்காமல், UPI மூலம் பணம் செலுத்தி, தங்களது பயணத்திற்கான டிக்கெட்டுகளைப் பெற உதவுகிறது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை, இந்தச் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது, இது பயணச் செலவைக் குறைக்கும் ஒரு கவர்ச்சிகரமான சலுகையாகும்.
ஊபர் செயலியில், பயணிகள் தங்களது பயணத் தொடக்க மற்றும் முடிவு நிலையங்களைத் தேர்ந்தெடுத்து, பயணிகளின் எண்ணிக்கையை உள்ளீடு செய்து, கட்டணத்தை உறுதிப்படுத்தி, QR டிக்கெட்டைப் பெறலாம். இந்த டிக்கெட்டை மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி கட்டண வசூல் கேட்களில் ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.
இந்த முயற்சி, 2024-இல் ஊபர் தலைமை நிர்வாகி தாரா கோஸ்ரோவ்ஷாஹி இந்தியாவிற்கு வருகை தந்தபோது ONDC உடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) ஒரு பகுதியாகும். இதன் மூலம், சென்னை மெட்ரோ பயணம் மேலும் எளிமையாகவும், ஒருங்கிணைந்த பயண அனுபவமாகவும் மாறுவதாக ஊபர் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி பிரவீன் நெப்பள்ளி நாகா தெரிவித்தார்.
இந்தப் புதிய சேவை, சென்னை மெட்ரோவின் 52.4 கி.மீ தொலைவில் இயங்கும் 2.7 லட்சம் பயணிகளுக்கு மேலும் வசதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டிஜிட்டல் டிக்கெட்டுக்கு 20% டிஸ்கவுண்ட்டா..!! சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.!!