சென்னைவாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்! வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தில் ஜனவரி 15 முதல் மெட்ரோ சோதனை ஓட்டம்!
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வடபழனி - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளில், வடபழனி - பூந்தமல்லி இடையிலான வழித்தடத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி சோதனை ஓட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆற்காடு சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு வரும் இந்த ‘ஆரஞ்சு வழித்தடம்’, சென்னையின் முதல் ‘டபுள் டெக்கர்’ (Double-decker) மெட்ரோ பாதை என்ற பெருமையைப் பெறப் போகிறது. இந்த வழித்தடப் பணிகளை விரைந்து முடிக்க சுமார் 4,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்தச் சேவை விரைவில் கொண்டு வரப்படும் எனச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) தெரிவித்துள்ளது. தற்போது 54.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விரிவாக்கம் சென்னையின் மேற்குப் பகுதி மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் மாதவரம் - சிறுசேரி, பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில், வடபழனி - பூந்தமல்லி இடையிலான ஒரு பகுதியை முன்கூட்டியே செயல்பாட்டிற்குக் கொண்டு வர மெட்ரோ நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக வரும் ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் இப்பாதையில் சோதனை ஓட்டம் (Trial Run) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: சென்னையில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை! துணை ஜனாதிபதி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!
இலக்கை எட்டும் பொருட்டு, உயர்மட்ட ஸ்லாப்கள் அமைக்கும் பணியில் 3,000 பேர், தண்டவாளம் அமைக்கும் பணியில் 600 பேர் மற்றும் சிக்னலிங் பணிகளில் 400 பேர் என மொத்தம் 4,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 7 குழுக்களாகப் பிரிந்து பணியாற்றி வருகின்றனர். இப்பணிகளில் சுமார் 57 ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான இந்தத் தடம் டபுள் டெக்கர் வடிவில் அமைக்கப்படுவதால், தொழில்நுட்ப ரீதியாக இது சென்னையின் மிகவும் சவாலான மற்றும் நவீனமான மெட்ரோ பாதையாகக் கருதப்படுகிறது.
தற்போது விம்கோ நகர் - விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாகப் பூந்தமல்லி வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னையின் புறநகர்ப் பகுதிகள் மாநகரத்துடன் இன்னும் எளிதாக இணைக்கப்படும். குறிப்பாகப் போரூர், வளசரவாக்கம் மற்றும் பூந்தமல்லி மக்கள் போக்குவரத்து நெரிசலின்றிப் பயணிக்கும் வாய்ப்பு ஏற்படும். இந்தச் சோதனை ஓட்டத்தின் போது தண்டவாளங்களின் உறுதித்தன்மை மற்றும் சிக்னல் இயக்கம் ஆகியவை விரிவாகப் பரிசோதிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: “சென்னையின் அடையாளம் இவங்கதான்!” – ஆரவாரங்களுக்கு நடுவே மழையிலும் உழைத்த தூய்மைப் பணியாளர்கள்!