×
 
☰

சென்னையில் அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ்: 7 பேர் கைது... 56 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

பைக் ரேஸ் மற்றும் அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய ஏழு பேர் கைது செய்யப்பட்டு 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் மிக ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை இயக்கி பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேரைச் சென்னை பெருநகரக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்; மேலும் விதிமீறலில் ஈடுபட்ட 56 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் சென்னையின் முக்கிய சாலைகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசம் செய்வது, வாகனங்களின் முன்பகுதியைத் தூக்கி வீலிங் செய்வது மற்றும் பைக் ரேஸ் நடத்துவது போன்ற சட்டவிரோத செயல்களால் அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பிரதான சாலைப் பகுதியில் இளைஞர்கள் சிலர் பொதுமக்களுக்குப் பீதியை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கி வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை இணைந்து அதிரடி சிறப்புச் சோதனையை முடுக்கிவிட்டன.

இதையும் படிங்க: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்களை பகிர்வது குற்றம்: சென்னை காவல்துறை எச்சரிக்கை!

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், அச்சுறுத்தும் வகையில் சாகசங்களில் ஈடுபட்ட 7 நபர்கள் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்; அத்துடன் தீவிர சோதனையின் மூலம் இதுவரை மொத்தம் 56 இருசக்கர வாகனங்கள் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்ததில், போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களில் சிக்காமல் தப்பிப்பதற்காக வாகனப் பதிவு எண் பலகை  இல்லாமல் இயக்கப்பட்ட 15 வாகனங்களும் சிக்கியுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை தரப்பு, சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இத்தகைய பைக் ரேஸ்களில் ஈடுபடுபவர்கள் சிறார்களாக  இருப்பது கண்டறியப்பட்டால், வாகனத்தை வழங்கிய அவர்களின் பெற்றோர்கள் மீதும் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுபோன்ற ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் பைக் ரேஸ்கள் குறித்து பொதுமக்கள் ஏதேனும் தகவல் அறிந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100, 'காவல் உதவி' செயலி அல்லது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் பிரத்யேக வாட்ஸ்அப் புகார் எண்ணான 90031 30103 என்ற எண்ணிற்குப் பொதுமக்கள் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க: எகிறிய ஹைப்..!! கார் ரேஸில் தூள் கிளப்பிய அஜித் அணி..!! 3ம் இடம் பிடித்து அசத்தல் வெற்றி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share