×
 
☰

சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

சென்னையில் கனமழை நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் ஜோசப் விஜய் ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்களுடன் ஆய்வு செய்தார்.

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த அதிதீவிர கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வருகை தந்து தீவிர ஆய்வு மேற்கொண்டார்; அதேவேளையில், இந்த மிக முக்கிய ஆய்வுக் கூட்டத்திற்குச் சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் அரசியல் மற்றும் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் சென்னையில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், நகரின் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளில் சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் இரவு முழுவதும் அயராது ஈடுபட்டனர்.

இச்சூழலில், கள நிலவரங்களை நேரடியாகக் கண்காணிக்கவும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் வருகை தந்தார். அப்போது, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், ராஜ்மோகன் மற்றும் வெங்கட்ரமணன் ஆகியோர் முதல்வருடன் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அம்மா உணவக ஊழியர்கள் போராட்டம்: முதல்வர் விஜய் சொன்ன பொய் அம்பலம்! டிடிவி தினகரன் ஆவேசம்!

கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் நகரின் 15 மண்டலங்களிலும் உள்ள சுரங்கப்பாதைகள், முக்கியச் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரின் அளவை முதல்வர் பார்வையிட்டார். மேலும், பொதுமக்கள் '1913' உதவி எண் மூலம் தெரிவிக்கும் புகார்கள் மீது எடுக்கப்பட்டு வரும் உடனடி நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம்களில் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் தடையின்றி சென்றடைவது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இருப்பினும், சென்னை மாநகராட்சியின் தலைமைச் செயலகமான ரிப்பன் மாளிகையிலேயே நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சியின் முதல் குடிமகளான மேயர் மற்றும் துணை மேயருக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், அவர்கள் இருவருமே இந்த ஆய்வில் கலந்துகொள்ளவில்லை என்றும் வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

கனமழை வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள அரசு இயந்திரம் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ள போதிலும், உள்ளாட்சி நிர்வாகத் தலைவர்கள் இக்கூட்டத்தில் இடம்பெறாதது சென்னை அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும் உற்றுநோக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தவெக தாவிய மாஜி அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு செக்?! மீண்டும் சீட் கிடையாது? வேறு ஆஃபர் வழங்கும் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share