×
 

பயணிகள் கவனத்திற்கு! மாறுகிறது மின்சார ரயில் நேரம்! - ஜனவரி 1 முதல் புதிய அட்டவணை அமல்!

சென்னை ரயில்வே கோட்டத்தில் ஜனவரி 1 முதல் புதிய ரயில் கால அட்டவணை அமலுக்கு வருவதைத் தொடர்ந்து, புறநகர் மற்றும் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு முதல் சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணம் செய்யும் புறநகர் மின்சார ரயில் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் மூன்று முக்கிய வழித்தடங்களில் இயங்கும் 9 மின்சார ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன.

பயணிகளின் வசதிக்காகவும், ரயில் இயக்கத்தைச் சீரமைக்கவும் இந்த நடவடிக்கையை சென்னை ரயில்வே கோட்டம் மேற்கொண்டுள்ளது. சென்ட்ரல் - அரக்கோணம், கடற்கரை - கும்மிடிப்பூண்டி மற்றும் செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் குழப்பத்தைத் தவிர்க்கப் புதிய கால அட்டவணையைச் சரிபார்த்துத் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை ரயில்வே கோட்டம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள மின்சார ரயில்களின் புதிய நேரங்கள் குறித்த விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி, சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில் காலை 5.50-க்குப் பதிலாக 5.55 மணிக்கு அரக்கோணம் வந்தடையும். அதேபோல், அரக்கோணத்தில் இருந்து காலை 10 மணிக்கு சென்னைக்குப் புறப்பட வேண்டிய ரயில், இனி பத்து நிமிடங்கள் முன்னதாகவே அதாவது காலை 9.50 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கும். பிற்பகல் 2.40-க்குச் சென்ட்ரல் வர வேண்டிய திருத்தணி ரயில், இனி 2.55-க்கு வந்து சேரும் என மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: போலீசாரை கத்தியால் விரட்டிய மர்ம நபர்! திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பரபரப்பு!

கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை வழித்தடங்களிலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8 மணிக்குக் கும்மிடிப்பூண்டிக்குப் புறப்படும் ரயில் இனி 8.05 மணிக்குப் புறப்படும். சூலூர்பேட்டையில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் 9.05 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து 9.25-க்குப் புறப்பட வேண்டிய ரயில் 9.40 மணிக்கும் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு வழித்தடத்தில் மாலை நேர ரயில்களில் மாற்றங்கள் அதிகம் உள்ளன. செங்கல்பட்டிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் ரயில் 6.05 மணிக்கும், இரவு 10.10-க்குப் புறப்பட வேண்டிய ரயில் 10.20 மணிக்கும் மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம், மாலை 6.40 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் 10 நிமிடங்கள் முன்னதாக 6.30 மணிக்கே புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மாற்றங்கள் அனைத்தும் புத்தாண்டு தினமான ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதால், அலுவலகம் செல்வோர் மற்றும் அன்றாடப் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தில் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: மயங்கி விழுந்த மாவட்டச் செயலாளர்! கண்டு கொள்ளாத எடப்பாடி பழனிசாமி - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share