"நாங்க இருக்கோம்"..! உலக சதுரங்க நாள்.. செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!
உலக சதுரங்க நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜூலை இருபதாம் தேதியான இன்று உலக சதுரங்க நாள் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. உலக சதுரங்க நாளை முன்னிட்டு, சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகளை குறிப்பிட்டு முதல்வர் விஜய் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தமிழ்நாடு இந்திய அளவில் அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி சாதனை படைத்து வரும் மாநிலமாக திகழ்கிறது. 1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் பாதையில் தொடர்ந்து, குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அரங்கில் சாதித்து தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.
இந்நாளில் அவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விஜய் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்கத்தின் நுட்பங்களைக் கற்றுத் தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் தீவிரமாகப் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே அமளி... எதிர்க்கட்சி முழக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட லோக்சபா!"
இத்தகைய முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் துணை நின்று, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதியளித்தார். இந்த உலக சதுரங்க நாள், சதுரங்க ஆர்வலர்கள் அனைவருக்கும் புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் என்று முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆவின் நெய் விலை உயர்வா..?? இது உண்மை இல்ல..!! ஆவின் நிறுவனம் விளக்கம்..!!