வேலை நிறுத்தம் செய்தால் இதுதான் நடக்கும்..!! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பறந்த வார்னிங்..!!
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பிப்ரவரி 3-ஆம் தேதி (இன்று) முதலும், மற்ற சில சங்கங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி முதலும் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.
இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், தலைமைச் செயலாளர் அனைத்து துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு விரிவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வேலைநிறுத்தம் அல்லது அதற்கான அச்சுறுத்தல் விடுப்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் எனில், அது தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளை (Tamil Nadu Government Servants' Conduct Rules) தெளிவாக மீறுவதாகக் கருதப்படும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டம்..!! திரண்ட லட்சக்கணக்கான மக்கள்..!! காரணம் இதுதான்..!!
போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அலுவலகத்திற்கு வராமல் இருப்பவர்களை 'பணியில்லை, சம்பளமும் இல்லை' (No Work, No Pay) அடிப்படையில் 'அங்கீகரிக்கப்படாத இல்லாமை' (Unauthorized Absent) எனக் கருதி, அந்த நாட்களுக்கான ஊதியம், படி உள்ளிட்டவை வழங்கப்படாது.
மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின் 17-பி பிரிவின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்ட காலத்தில் தற்செயல் விடுப்பு உள்ளிட்ட எந்த வகை விடுப்பும் (மருத்துவ விடுப்பைத் தவிர) அனுமதிக்கப்படாது. மருத்துவ விடுப்பு கோரப்பட்டால், அதன் உண்மைத்தன்மையை மருத்துவ வாரியம் மூலம் சரிபார்க்க வேண்டும். போலியான மருத்துவ விடுப்பு எனத் தெரியவந்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலி அடிப்படையிலான பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களை வேலையிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பணிகள் எவ்வாறும் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், போராட்ட காலம் முழுவதும் அலுவலக வருகைப் பதிவுகளை தினசரி காலை 10.15 மணிக்குள் அரசுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் அரசு தனது அன்றாட சேவைகளை தடையின்றி தொடர உறுதியாக உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிதிச் சுமையை காரணம் காட்டும் அரசு..! அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..!