×
 
☰

நள்ளிரவில் சிறுவன் கடத்தல்... சினிமா பாணியில் அதிரடி காட்டிய போலீஸ்... 7 மணி நேரத்தில் நடந்தது என்ன?

சின்னசேலம் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம்; சினிமா பாணியில் 7 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ் – பரமேஸ் தம்பதியினர். இவர்களுக்கு புகழ், ரேதுசன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜெயபிரகாஷ், குரால் நான்கு முனைச் சந்திப்புப் பகுதியில் கோழிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடைக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து, தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று வேலை நிமித்தமாகச் சேலம் சென்றிருந்த ஜெயபிரகாஷ், மீண்டும் திரும்பி வந்தபோது கடையின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த தனது இளைய மகன் ரேதுசனைக் காணவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் சிறுவனைத் தேடியுள்ளனர். ஆனால், சிறுவன் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

இதற்கிடையே, சிறுவன் கடத்தப்பட்டதாகத் தகவல் பரவியதால், அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்குப்பம் காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஈச்சர் வாகனத்தில் வந்திறங்கிய நபர் ஒருவர் சிறுவனைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்த ஈச்சர் வாகன ஓட்டுநரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வேப்பூரில் இருந்து லிப்ட் கேட்டு வந்த ஒருவர், குரால் நான்கு முனைச் சந்திப்புப் பகுதியில் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தியபோது, தனது வீட்டிற்குத் தொலைபேசியில் பேச வேண்டும் எனக் கூறி ஓட்டுநரின் செல்போனை வாங்கியுள்ளார். பின்னர், அந்த நபர் செல்போனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஓட்டுநரின் செல்போன் எண்ணைக் கொண்டு அதன் சிக்னலை அடிப்படையாக வைத்து போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். சினிமா படப் பாணியில் அந்த நபரைப் பின்தொடர்ந்த போலீசார், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு பேருந்தாக ஏறி இறங்கிச் சிறுவனைத் தேடினர்.

அப்போது, ஓசூர் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் குழந்தையுடன் அமர்ந்திருந்த அந்த நபரை போலீசார் அடையாளம் கண்டனர். உடனடியாக அவரைப் பிடித்து, குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். பின்னர், குழந்தையைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் அந்த நபரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட மூன்று வயது சிறுவன் ரேதுசனை போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நீண்ட நேரமாகக் காணாமல் போன குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதால், பெற்றோர் நிம்மதியடைந்தனர்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் எதற்காகக் குழந்தையைக் கடத்திச் சென்றார்? இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? குழந்தையை விற்பனை செய்யும் நோக்கத்தில் கடத்தினாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குரால் நான்கு முனைச் சந்திப்புப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில், போலீசார் துரிதமாகச் செயல்பட்டு ஏழு மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டுள்ளனர். குற்றவாளியைப் பின்தொடர்ந்து சென்று குழந்தையைப் பத்திரமாக மீட்ட காவல்துறையினருக்குப் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share