சித்திரை மாத சிறப்பு பூஜை.. ஆசியாவிலேயே உயரமான விநாயகர் சிலைக்கு முக்கனிகளால் அலங்காரம்..!
சித்திரை மாத தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே உயரமான விநாயகர் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
சித்திரை மாத தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் கடவுளுக்கு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். தமிழ் மாதங்களில் முதலாவது மாதமானது சித்திரையின் முதல் நாளான இன்று (ஏப்.14) தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் நீதியாகவும் பார்த்தால் சூரியன் தன்னுடைய பயணத்தை 12 ராசிகளிலும் (கோல்கள்) நிறைவு செய்துவிட்டு, மீண்டும் முதல் ராசியான மேஷ ராசியில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கும் நாள், தமிழர் முறைப்படி புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: விளையாட்டு.. விபரீதம்..! பட்டாசு வெடித்த மாணவனின் நடுவிரல் துண்டான சோகம்..!
இந்நிலையில் நேற்றுடன் குரோதி வருடம் நிறைவடைந்து, இன்று முதல் விசுவாவசு வருடம் தொடங்கியுள்ளது. இந்த நாளை தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாகவும், மலையாள மொழி பேசும் மக்கள் சித்திரைக்கனி (விஷு) எனவும் கொண்டாடுகின்றனர். இந்த புத்தாண்டை முன்னிட்டு அனைவரின் இல்லங்களிலும் முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் பல்வேறு பழங்களை வைத்து வழிபாடு செய்வர். அதே போன்று அனைத்து கோயில்களிலும் இன்றைய தினம் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், கோவையில் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே உயரமான விநாயகர் சிலை கொண்ட புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் அதிகாலை முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது.அதில், முக்கனிகளான மா, பலா, வாழை உட்பட அண்ணாச்சி, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆப்பிள் உள்ளிட்ட இரண்டு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கோவையில் மருத மலை, ஈச்சனாரி, கோனியம்மன் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், மலையாள மொழி பேசும் மக்களின் புத்தாண்டான விஷுவை ஒட்டி கோவை சித்தாபுதூர் உள்ள ஐயப்பன் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா! ரூ.6 கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்.. செயின் லிங்க்கை அலேக்காக தூக்கிய போலீஸ்..!