மின்சாரத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு! சிஐடியு சார்பில் நாளை முதல் தொடர் போராட்டம்!
மின்சாரத்துறையைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், அமைச்சர் கருத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சிஐடியூ சார்பில் நாளை முதல் 3 கட்டப் போராட்டம் தொடங்குகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தியும், மின்கட்டண உயர்விற்கு மின் ஊழியர்களின் தவறான கணக்கெடுப்பே காரணம் எனக் கூறி அவதூறு பரப்பிய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் தனது பேச்சை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (CITU) சார்பில் நாளை முதல் 3 கட்டப் போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெயசங்கர் மற்றும் தலைவர் கண்ணன் ஆகியோர் இது தொடர்பான விளக்கங்களை முன்வைத்தனர். மின்சார வாரியத்தை முழுமையாகத் தனியார்மயமாக்கும் வகையில் துறை அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டு வருவது பொதுத்துறை நிறுவனத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானது என அவர்கள் எச்சரித்தனர்.
மேலும், 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்த அமைச்சர், பல ஆண்டுகளாகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தற்போதைய ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் காப்பது ஏமாற்று வேலை எனச் சாடினர்.
இதையும் படிங்க: MSME நிறுவனங்களுக்கு குட் நியூஸ்: சோலார் அமைத்தால் 100% மின்சார வரி விலக்கு! தமிழக அரசு அதிரடி!
பொதுமக்களுக்கு மின்கட்டணம் அதிகளவில் வந்ததற்குக் களப்பணியாளர்களின் தவறான கணக்கெடுப்புதான் காரணம் எனச் சட்டமன்றத்தில் அமைச்சர் நிர்மல் கூறிய குற்றச்சாட்டை வன்மையாக மறுத்த சங்க நிர்வாகிகள், எல்-நினோ பருவநிலை மாற்றத் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்து பொதுமக்களின் மின்தேவை இயல்பாகவே உயர்ந்ததுதான் கட்டண உயர்வுக்குக் காரணமே தவிர, மின் ஊழியர்களின் தவறு அல்ல; உண்மைக்குப் புறம்பான இந்தக் கருத்தை அமைச்சர் நிர்மல் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு ஜூலை 10-ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற நடைமுறை உண்மையை மறைத்துவிட்டு ஊழியர்கள் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது எனவும் தெளிவுபடுத்தினர்.
இந்தத் தனியார்மய முயற்சிகளையும் அமைச்சரின் தவறான பிரச்சாரத்தையும் கண்டித்து, நாளை (ஆகஸ்ட் 25) மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டமும், செப்டம்பர் 1-ஆம் தேதி அனைத்து மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்கள் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 7-ஆம் தேதி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பாக நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் திரளும் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும், அதன்பின்னரும் அரசு செவிசாய்க்காவிட்டால் அடுத்தகட்ட தீவிர நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: ஒரே IP முகவரியில் பல நிறுவனங்கள் டெண்டர்! ரூ.1,028 கோடி முறைகேடு! மின்வாரிய வழக்கில் அதிரடி திருப்பம்!