ஹை அலர்ட்டில் டெல்லி... தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த கரப்பான் பூச்சிகள்... இன்று காத்திருக்கும் அதிரடி சம்பவம்...!
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்த உள்ளதால், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிஜேபி கட்சியினர் மும்பை மற்றும் பெங்களூருவில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், இந்தப் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
டெல்லி போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ள நபர்களின் தரவுகளை டெல்லி காவல்துறை சேகரித்துள்ளது. அவர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!
சிஜேபி கட்சியினர் டெல்லியில் ஒன்றுகூடுவதைத் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. போராட்டத்தை முன்னிட்டு, டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று மாலை 6 மணி வரை மூடப்பட்டுள்ளன. அதேபோல், டெல்லிக்கு வரும் மற்றும் டெல்லியில் இருந்து புறப்படும் 245 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஜந்தர் மந்தர், ஜன்பத் மற்றும் கர்த்தவ்ய பாதை ஆகிய பகுதிகளைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு நேற்று இரவு முதல் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஜந்தர் மந்தர் பகுதியில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், 23,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஏழு அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தின்போது கைது செய்யப்படுபவர்களை அடைத்து வைப்பதற்காக 12 தடுப்பு மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, போராட்டத்தை காந்திய வழியில் அமைதியாக நடத்துமாறு தனது ஆதரவாளர்களுக்கு சிஜேபி நிறுவனர் அபிஜே தீப்கே அறிவுறுத்தியுள்ளார். தாம் கைது செய்யப்பட்டாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் நெருக்கடி காலத்தை நினைவுபடுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே, அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உண்டு என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்பு... அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டம்..! CJP தலைவர் அபிஜித் தீப்கே அறிவிப்பு.!!