கையில் கட்சி கொடி; கழுத்தில் காவி துண்டு... அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு... பாஜக Vs விசிகவினர் இடையே வாக்குவாதம்...!
பாஜக சார்பில் கையில் கட்சி கொடி மற்றும் காவிதுண்டு அணிந்து மாலை அணிவிக்க வந்த 15 பெயர் கொண்ட பாஜக குழுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்பாக்கம் அணுமின் நிலையம் நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக நிர்வாகிகளை விசிக நிர்வாகிகள் மாலை போட விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரத்தில் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இப்படி டெல்லி முதல் கன்னியாகுமரி வரை அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும், வழக்கறிஞர்களும், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம அனுமின் நகர் குடியிருப்பில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு இன்று காலை முதல் பல்வேறு கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் சங்கம் மற்றும் அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ”தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டு பண்ண முயற்சி” - பாஜக - அதிமுக வேஷத்தை கலைத்த அமைச்சர் சேகர் பாபு...!
இந்நிலையில் பாஜக சார்பில் கையில் கட்சி கொடி மற்றும் காவிதுண்டு அணிந்து மாலை அணிவிக்க வந்த 15 பெயர் கொண்ட பாஜக குழுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் கொடியும் காவி துண்டும் அணிந்து வந்தால் மாலை அணிவிக்க அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கல்பாக்கம் போலீசார் இரு தரப்பினரிடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பாஜகவினரிடம் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையில் காவி துண்டையும், கட்சி கொடியையும் அகற்றிய பின் மாலை அணிவிக்க அனுமதி அளித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், பின்னர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். இதன் பின்னர் பாஜக அம்பேத்கர் சிலருக்கு மாலை அணிவித்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.