×
 

"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வெற்றியின் உச்சம் தெரியுமா?" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வெற்றியின் உச்சமே, அண்டை மாநிலங்களும் இந்தத் திட்டத்தினை செயல்படுத்துவதுதான் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் இன்று (டிசம்பர் 12) இரண்டாவது கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விரிவாக்கத்தின் மூலம் உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை 1.34 கோடியாக உயர்ந்துள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான இந்தத் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக, 1.63 கோடி விண்ணப்பங்களிலிருந்து 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, தமிழக அரசின் கணக்கீட்டின்படி, சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்கள் ஏற்கனவே பயனடைந்து வருகின்றனர். 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விரிவுபடுத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் விண்ணப்பித்த 28 லட்சம் பெண்களில் 17 லட்சம் பேர் தகுதியானவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: வெல்லும் தமிழ் பெண்கள்! மகளிர் உரிமைத் திட்டம் 2வது கட்டத்தை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!

நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 2-வது கட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். புதிதாகச் சேர்க்கப்பட்ட 17 லட்சம் பேரையும் சேர்த்து, தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1.34 கோடியாக உயர்கிறது.

இந்த உரிமைத் தொகையைப் பெற, விண்ணப்பதாரரின் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ₹2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம், மற்றும் ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கான மின்சாரம் 3600 யூனிட்டுக்கும் குறைவாக இருத்தல் வேண்டும் என்ற விதிகள் வகுக்கப்பட்டன.

2024-25 நிதியாண்டில் ₹13,790 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதுவரை செலவு: இந்த மகளிர் உரிமைத் தொகைக்காக இதுவரை ₹30,838 கோடியே 45 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" விழாவில் பேசிய ஒருவர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வெற்றி பிற மாநிலங்களிலும் எதிரொலிப்பதாகக் கூறினார்:

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வெற்றியின் உச்சம் என்ன தெரியுமா? அண்டை (பிற) மாநிலங்கள் கூட இந்தத் திட்டத்தைத் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இத்திட்டங்களை 'இலவசங்கள்' எனக் கொச்சைப்படுத்துபவர்கள் கூட இந்தத் திட்டத்தைத் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: ஜி.எஸ்.டி.பி.-யில் 16% வளர்ச்சி! பொருளாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம்! RBI அறிக்கை பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share