×
 

“வெற்றிச் சங்கமம்.. இது திராவிட சங்கமம்!” சென்னை சங்கமம் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

சென்னை சங்கமம் என்பது வெறும் கலைத் திருவிழா மட்டுமல்ல, இது தமிழினத்தின் வெற்றிச் சங்கமம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று (ஜனவரி 14) மாலை 6 மணி அளவில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ கோலாகலமாகத் தொடங்கியது. விழாவைத் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த முதலமைச்சர், மேடையில் திரண்டிருந்த 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் கலைத்திறனைப் பாராட்டிப் பேசினார். நாட்டுப்புறக் கலைகளுக்குத் தனது அரசு அளிக்கும் முக்கியத்துவத்தையும், இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வரும் தனது தங்கை கனிமொழி எம்பி-யின் உழைப்பையும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: 20 இடங்களில் கலை விழா.. களைகட்டும் மெட்ராஸ்! இன்று ஆரம்பமாகிறது சென்னை சங்கமம்!

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  சென்னை சங்கமம் இன்று தமிழ் சங்கமமாக எழுச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கலை பண்பாட்டுத்துறை இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது. இங்குத் தங்களது கலை ஆற்றலை வெளிப்படுத்திய அத்தனை கலைஞர்களுக்கும் உங்கள் அனைவரின் சார்பில் நான் சல்யூட் அடித்துக் கொள்கிறேன் என்றார். மேலும், இந்த விழாவைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் என் அருமை தங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரக்கூடிய காலங்களில் நம்முடைய திராவிட மாடல் அரசு, கலைகளுக்காக இன்னும் பல சாதனைகளைப் புரியும் என இந்தத் தருணத்தில் உறுதி அளிக்கிறேன். கலையை வளர்ப்போம், தமிழ்நாடு வெல்லும்! என உற்சாகமாக முழக்கமிட்டார்.

இன்று தொடங்கிய இந்தத் திருவிழா வரும் 18-ஆம் தேதி வரை சென்னை மாநகரின் 20 முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது. கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை வடிவங்களை 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பொதுமக்களுக்காக நிகழ்த்திக் காட்ட உள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு முதன்முறையாக ‘கோ-ஆப்டெக்ஸ்’ மற்றும் கலை பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி வரும் 17-ஆம் தேதி காணும் பொங்கலன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டுச் சென்னை மக்கள் இந்தக் கலைச் சங்கமத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க: தப்பாட்டம் முதல் சிலம்பாட்டம் வரை! பொங்கல் கலைத்திருவிழாவிற்கு தயாராகும் தலைநகரம் - முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share